OUR CLIENTS
எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு Posted on 19-Jul-2017 எதிர்க்கட்சிகள்  கடும் அமளி மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 19-
விவசாயிகள் பிரச்சனை, பசு குண்டர்கள் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று  முன்தினம் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பல்வேறு முறை ஒத்தி வைத்தார்.

இருப்பினும், மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை, பசு குண்டர்கள் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் தாங்கி பிடித்தவாறு அமளியில் ஈடுபட்டனர்.

பசு பாதுகாப்பு விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி, விஜய் மல்லையாவை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதித்தது யார்? என்பது போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றன.
அதேபோல், மாநிலங்களவையிலும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் வருமான, பகுஜன் சமாஜ் கட்சி யின் தலை வருமான மாயாவதி பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூர் தலித் இன மக்களுக்கு எதிராக சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நேற்று காலை பாராளுமன்ற மேல்சபையில் பிரச்சனை எழுப்பினார்.

இவ்விவகாரம் தொடர்பாக அவையில் தனது கருத்தை பதிவு செய்ய சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் என்று மாயாவதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு மூன்று நிமிடம் நேரம் ஒதுக்குவதாக துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் தெரிவித்தார்.  அப்போது பேசிய மாயாவதி, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கருக்கு சிலை வைக்கவும் பேரணியாக செல்லவும் தலித்  இன மக்களுக்கு சஹரன்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தடை விதித்தது. ஆனால், மே மாதம் 5-ம் தேதி மஹாராணா பிரதாப் ஆதரவாளர்கள் பேரணி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. எங்கள் இன மக்களின்மீது அரசு எடுத்துவரும் அடக்குமுறைக்கு இந்த ஒரு உதாரணம் போதும் என்று கூறினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட துணை சபாநாயகர் பி.ஜே. குரியன். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என சுட்டிக் காட்டினார். இதனால், ஆவேசம் அடைந்த மாயாவதி,  ‘நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. இடையில் நீங்கள் இதைப்போல் குறுக்கீடு செய்ய கூடாது. எங்கள் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக எனது கருத்தை பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டால் இந்த அவையில் நான் உறுப்பினராக தொடர்வதில் அர்த்தமில்லை’ என்று ஆவேசமாக கூறினார்.
 
இதை கேட்டதும் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த துணை சபாநாயகர் பி.ஜே. குரியன், மாயாவதியை சமாதானப்படுத்த முயன்றார். இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்ற விதிமுறைகளின்படி முன்கூட்டியே ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த மாயாவதி, தனது இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்து ‘எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்யப் போகிறேன் என்று சப்தமாக கூறியவாறு அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து இதர சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

மாயாவதியின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. எம்.பி.யும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி கடும் கண்டனம் தெரிவித்தார். துணை சபாநாயகரை மிரட்டும் பாணியில் பேசியதற்காக இந்த அவையில் மாயாவதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மாயாவதியுடன் இணைந்து பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அவைக்குள் வந்தனர். அவையின் மையப் பகுதியில் கூடி நின்ற அவர்கள், ‘தலித் மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை தொடர்ந்து நடைபெற விட மாட்டோம் என்றும் தலித் விரோத மத்திய அரசு ஒழிக’ என்றும் அவர்கள் கூச்சலிட்டனர். 

இந்த அமளியாலும், தலித் இன மக்கள் மீதான தாக்குதல், மாட்டிறைச்சி கடத்தல் தொடர்பான படுகொலைகள், விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்திவைக்கப்பட்டது.

Label