OUR CLIENTS
உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்டனம்
உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்டனம் Posted on 19-Jul-2017 உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்டனம்

சென்னை, ஜூலை 19- 
உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அப்போது, எஸ்.டி. பிரிவு மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், என் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றி  பிறப்பிக்கப்பட வில்லை என்று கூறி அந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தார். அதுமட்டு மல்லாமல், புதிய அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யும்போது, உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிக்கவேண்டும் என்று தான் உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்சும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்த வில்லை. நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்சில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. பின்னர், ஜூலை மாதத்துக்குள் நடத்துவதாக மற்றொரு உத்தரவாதத்தை வழங்கியது. ஆனால், இதுவரை தேர்தலை நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

நீதிபதி கிருபாகரன், பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்த பின்னர்தான், இந்த தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இது மட்டுமல்ல, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதால், இந்த தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. எனவே, தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க காலக்கெடு விதித்து இந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, ‘தமிழக அரசும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை தடுக்கும் விதமாக எந்த ஒரு உத்தரவையும் இதுவரை பிறப்பிக்க வில்லை. ஆனால், இந்த இரு கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி, தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடித்து வருகிறது’ என்று வாதிட்டார்.

மேலும் அவர் வாதத்தில், ‘மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று இந்த உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தான் உத்தரவாதம் அளித்தது. அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தேர்தலை நடத்த வில்லை. இந்த செயல், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் என்பது சுயாட்சி அதிகாரத்தை கொண்டது. பல முக்கிய முடிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மட்டுமே எடுக்க முடியும். அந்த முடிவுகளை, தற்போது உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தமிழக அரசு நியமித்துள்ள தனி அதிகாரிகளால் எடுக்க  முடியாது. எனவே, தேர்தலை நடத்த ஒரு காலக் கெடுவை  மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
   
அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில்  ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தனி நீதிபதி கிருபாகரன் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டால்தான், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும்’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றதுக்கு உத்தரவாதத்தை தேர்தல் ஆணையம்  கொடுத்துள்ளது. அப்படி இருக்கும் போது, எப்படி தேர்தலை நடத்தாமல் இருக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாக தேர்தல் ஆணையம் வக்கீல் நெடுஞ்செழியன் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதற்குள் இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Label