OUR CLIENTS
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் குழந்தை திருமணங்கள்!
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் குழந்தை திருமணங்கள்! Posted on 20-Jul-2017 கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் குழந்தை திருமணங்கள்!

விழுப்புரம், ஜூலை 20-
இன்றைய விஞ்ஞான யுகத்திலும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

பெண்களின் முன்னேற்றமே, நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்தே மகாகவி பாரதி ‘பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்‘ என்றார். பாவேந்தர் பாரதிதாசனோ ‘கல்வியில்லா பெண்கள் ஒரு களர் நிலம்‘ என சாடினார்.

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்காத சமுதாயம், நாகரீக சமுதாயமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக பெண் சமுதாயம் இன்று கல்வியில் முன்னேறியுள்ளனர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும் சாதனை புரிந்து வரும் இன்றைய சூழலிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, குழந்தை திருமணம் போன்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதுதான் வேதனை. குறிப்பாக கிராமங்களில் அதிகமாகவே உள்ளது. 

காரணம் கல்வியறிவு இல்லாமையும், குடும்ப வறுமையும் தான். 1929ம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்றும், 1940ல் திருத்தத்தின் படி, திருமண வயது 15 எனவும், 1978ல் 18 வயது என்றும் உயர்த்தப்பட்டது.

 18 வயதுக்கு குறைவானவர்களை திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாவர் என அறிவிக்கப்பட்டது. பின்னர், 2006ல், குழந்தைத் திருமண தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

 அப்போது தான், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், ஒரு பெண் மனதளவிலும், உடல் அளவிலும் முழுமையான வளர்ச்சியடைய வேண்டும் என்பதே. மாறாக 18 வயது நிரம்பாத பெண் குழந்தைக்கு திருமணம் நடத்துவதால், மனதளவிலும் உடல் அளவிலும் சோர்வடைகின்றனர்.

கல்வி மற்றும் பொருளாதாராத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017ம் ஆண்டு கடந்த ஜூன் மாதம் வரையிலான 51 மாதங்களில் 617 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

 இதற்கு முக்கிய காரணமாக வறுமை, நிலையில்லாத வேலை என கூறப்படுகிறது. வறுமை மற்றும் பொருளாதார காரணங்களால் பெண் குழந்தைகள் அதிகளவில் மேற்படிப்புகளை தொடர முடிவதில்லை. இதனால் சில பெற்றோர்கள் 10ம் வகுப்பு முடித்த நிலையிலேயே, தங்களின் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயித்து, நடத்தி வைக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு நடைபெறும் சில திருமணங்கள், அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிய வரும்போது, அந்த திருமணங்கள் தடுத்த நிறுத்தப்படுகின்றன.

விவசாயமே பிரதான தொழிலாக உள்ள நிலையில் இம்மாவட்டங்கள் தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருவதால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகள், வேலை தேடி தமிழகத்தின் பிற மாவட்டங்களான சென்னை, கோவை, திருப்பூர், சேலம் மட்டுமன்றி மும்பை, குஜராத், பெங்களூரு, கேரளா என பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றனர். 

அவர்களில் பெரும்பாலானோரின் குழந்தைகள் அவரவர் வயதான தாய், தந்தை அல்லது உறவினர் பராமரிப்பில் வளர்கின்றனர். அவர்கள் பருவமடைந்ததும், அவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

பெருகி வரும் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள் மூலம் பள்ளிப் பருவத்திலேயே அதாவது, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் நிலையிலேயே காதல் வயப்பட்டு, பாதை மாறும் நிலை ஏற்படுகிறது. இதனால் திருமண வயதை எட்டாத நிலையில், அவசரமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். 

மேலும் சில இடங்களில் உறவினரின் சொத்துகள் மாறாமல் இருக்க, வயது வித்தி யாசம் பார்க்காமல் மைனர் பெண் திருமணங்களை ஊக்குவிக்கின்றனர். பல இடங்களில் வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் உள்ள ஏழ்மையான பெற்றோர்கள் வேறு வழியின்றி மைனர் பெண்களை திருமணத்திற்கு உட்படுத்தும் நிலை ஏற்படுகிறது. 

இதனால், வறுமையும் குழந்தை திருமணத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூக கட்டமைப்பை மாற்றியமைக்க அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்பச்சூழல், சுற்றுச்சூழல், வெளி நபர்கள் நட்பு ஆகியவற்றை எடுத்துரைக்க வேண்டும். 

எனவே 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வியை பயிற்றுவிக்க அரசு முன் வர வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தவிர்த்திட மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக ஆர்வலர்களின் கருத்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளான திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர், கல்வராயன்மலை, மேல்மலையனுார், மயிலம், மரக்காணம் பகுதிகளில் நிலையான தொழில் இல்லை. 

இங்கு வசிக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வேலையின்றி, ஜீவனம் செய்ய முடியாமல் பிற மாநில, மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்லும் அவலம் உள்ளது. இந்த நிலையில் பெண் குழந்தைகளை உடன் அழைத்து சென்று அவரை பாதுகாத்து திருமணம் செய்து வைக்க முடியாது என்பதால், உறவினருக்கே திருமணம் செய்து கொடுக்கின்றனர்.

அதேபோன்று உடல் நலம் குன்றிய பெற்றோர், தங்களது பெண் குழந்தையை தங்கள் காலத்திலேயே பாதுகாப்பாக ஒருவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் திருமண வயதை எட்டாத நிலையில் குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். 

விருத்தாசலம் நகரில் கடந்தாண்டு தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணமும் இதுபோன்றே. உடல் நலம் குன்றிய பெற்றோரின் 18 வயதுக்கு குறைவான பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த நபருக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து, தடுத்து நிறுத்தப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் கூறுகையில், மாவட் டத்தில் திட்டக் குடி, விருத்தாசலம் பகுதிகளில் தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ஒன்றிரண்டு நடக்கிறது. சமூக கட்ட மைப்பு முன்புபோல இல்லை; பள்ளிப் பருவத்திலேயே மாணவிகள் காதல் வயப்படுகின்றனர். இதற்கு பயப்படும் பெற் றோர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, அவர்களின் வயதை கருத்தில் கொள்ளாமல் திருமணம் செய்து வைக்க முற்படுகின்றனர்.

ஒரு மாணவி பள்ளிக்கு சரிவர வரவில்லை என் றால், அவரவர் வகுப்பு ஆசிரியர் விசாரிக்க வேண் டும். அவர் விடுப்புக்கான காரணத்தை சக மாணவி களிடம் விசாரித்து, அவர்களின் பெற்றோரை அழைத்து பேச வேண்டும்.

குழந்தை திருமண தடைச் சட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் ஆண், அவரது உறவினர்கள் மீது வழக்கு தொடர்வதைப் போல, பெண்ணின் பெற் றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 6 மாதங்களில் 32 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெற்றோர் பராம ரிக்க முடியாத பல மாணவிகளை, குழந்தை கள் நலக்குழு விடுதியில் தங்கி படிக்க வைத்து, உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

எனவே, ஆசிரியர்கள் 
மட்டுமல்லாது அனைத்து துறை அலுவலர்கள், சமூக பொறுப்புணர்வு கொண்ட அனை வரும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே குழந்தை திருமணங்களை தடுக்க முடியும்‘ என்றார்.
கடந்த ஆண்டுகளில் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை விபரம் மாவட்டம் வாரியாக
-----------------------------------ஆண்டு கடலூர் விழுப்புரம்

------------------------------------2013-&14 36 68
2014&-15 63 86
2015&-16 43 106
2016&-17 57 97
2017-&18* 29 32
_______________________
மொத்தம் 228 389
_______________________
* இந்த நிதியாண்டில் கடந்த 
ஏப்ரல் முதல் ஜூன் 3ம் தேதிவரையிலான புள்ளி 
விபரம்.

Label