OUR CLIENTS
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பெயரைச் சொல்லி காண்ட்ராக்டர்களை மிரட்டும் திமுக புள்ளிகள்!
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பெயரைச் சொல்லி காண்ட்ராக்டர்களை மிரட்டும் திமுக புள்ளிகள்! Posted on 21-Jul-2017 சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பெயரைச் சொல்லி  காண்ட்ராக்டர்களை மிரட்டும் திமுக புள்ளிகள்!

காஞ்சிபுரம், ஜூலை 21-
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் வரும் சோழிங்கநல்லூர் தொகுதியின் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். 

அதிமுகவின் கோட்டையாக இருந்த இந்த தொகுதியை மழை வெள்ள பாதிப்பு காரணத்தால் தட்டிப்பறித்தது திமுக. இருந்தாலும் உள்ளாட்சி பதவிகள் பெரும்பாலும் அதிமுகவிடம்தான் உள்ளது. அதுவும் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி முழுவதும் இப்போதும் அதிமுகவின் கோட்டையாகத்தான் உள்ளது. இதனால் இங்குள்ள வார்டுகளில் திமுகவை வளர்க்க வேண்டும் என்று அடிக்கடி வலம் வருகிறார் எம்எல்ஏ. 

ஆனால் அவர்களது கட்சி நிர்வாகிகளோ காண்ட்ராக்டர்கள் முதல் வீடு, கடை என்று சகலத்திலும் மிரட்டல் வசூலில் இறங்கியுள்ளனர். அதுவும் எம்எல்ஏ பெயரைச் சொல்லி தைரியமாக வசூல் வேட்டை நடத்துவதாக பொதுமக்களே கூறுகின்றனர். இத்தொகுதியில் உள்ள வார்டுகளில் அரசின் அனைத்து இலவச திட்டங்களும் முழுமையாக பெற்ற வார்டு 184வது வார்டு. 

இந்த வார்டில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல உள்ளாட்சி பணிகள் (மெட்ரோ வாட்டர் பைப்லைன் பதிப்பு, பாதாள சாக்கடை பணிகள்) இப்போதும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காண்ட்ராக்டர்களால் தாமதமான பாதாள சாக்கடை போன்ற இப்பணிகளை இப்போது அரசு தரப்றே முன்னின்று செய்கிறது. 

இங்கு திமுக வட்ட செயலாளராக இருக்கும் வி.வெங்கடேசன் மற்றும் அவரது  சகோதரர்கள் மனோகரன், தில்லைநாதன் மற்றும் எ.வி.எம்.ரமேஷ், கதிரவன் உட்பட  10க்கும் மேற்பட்ட திமுக புள்ளிகள் அரசு பணியை செய்யும் காண்ட்ராக்டர்களை தடுத்து எங்களுக்கு கமிஷன் கொடுக்காமல் வேலை செய்ய விடமாட்டோம். 

தொகுதியே எங்ககிட்டதான் இருக்கு. எம்எல்ஏ கிட்ட பேசுறியா என்று மிரட்டல் விட்டு வாகனங்களின்  சாவியை பறித்து கொண்டு விசிட்டிங் கார்டு கொடுத்து இந்த முகவரிக்கு பணத்தோடு வந்து சாவியை வாங்கிக் கொள் என்று படுதைரியமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். 

இதனால் மீண்டும் பணிகள் நடக்காமல் கிடப்பில் உள்ளதாக சொல்கின்றனர். அதேபோல சமீபத்தில் கருணாநிதியின் வைர விழாவுக்கு வெறும் 300 பிளாஸ்டிக் குடங்களை மட்டுமே வழங்கிய இவர்கள்  இதைச் சொல்லி கடைகள், வணிக  வளாகங்கள், ஓட்டல்கள் என்று பல லட்சத்துக்கு வசூல் செய்து விட்டனராம். 

திமுக இத்தொகுதியில் வெற்றி பெற்று இதுவரை ஒன்றும் செய்யவில்லை. எம்எல்ஏ எங்கள் வார்டுகளை எட்டிக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அவரது பெயரைச் சொல்லி திமுகவினர் வசூல் செய்வதோடு அரசு வேலைகளை தடுக்குறாங்க. 

இதெல்லாம் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷூக்கு தெரியாது. இதுபற்றி எம்எல்ஏவுக்கும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் புகார் அனுப்ப போகிறோம் என்றனர் பொதுமக்கள்.

இதேபோல 105வது வட்டத்தில் வரும் கண்ணகி நகரில் திமுக வட்ட செயலாளர் ரமேஷ், அவரது சகோதரர் எம்.அருள், மாவட்ட பிரதிநிதி அரிகிருஷ்ணன் ஆகியோரும் எம்எல்ஏபெயரைச் சொல்லி சகட்டு மேனிக்கு வசூல் வேட்டையில் இறங்கி ஜமாய்க்கின்றனர். இதை தட்டிக்கேட்ட திமுக வட்ட பிரதிநிதி முருகன் என்பவர் மீது தாக்குதல் நடத்தினர். 

இப்போது திமுகவே இங்கு இரண்டாகி விட்டது. ஏற்கனவே 195வது  வட்டம் அதிமுக வட்ட செயலாளர் டி.சி.கருணாவின் செயல்பாடுகள் அதிமுகவின் கோட்டையாக உள்ளது.திமுகவினர் வசூல் வேட்டையால் மேலும் அதிருப்தி நிலவுகிறது என்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் இப்போது அதிகாரிகள் பிடியில் உள்ளது. 

அந்த அதிகாரிகளை எம்எல்ஏ பெயரைச்  சொல்லி அடக்கிவிட்டு முழுக்க முழுக்க வசூல் வேட்டையில் திமுக புள்ளிகளே இறங்கி  விட்டனர். இதனால் திட்ட வேலைகளை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர் காண்ட்ராக்டர்கள். 184வது வட்டத்தில் மேல்நிலை பள்ளிகள்,  ரேஷன் கடைகள், மீன் அங்காடி, பல்  மருத்துவமனை, அம்மா உணவகம், நூலகம், பூங்கா, குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு என்று அனைத்தும் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்போது 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையும் தயாராகி கொண்டு இருக்கிறது. 

இவை அனைத்துமே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் தங்கள் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்தி வரும் திமுக புள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா?.

Label