OUR CLIENTS
இரட்டை இலையை மீட்டுத்தருவாளா திருவக்கரை வக்கிரகாளியம்மன்?
இரட்டை இலையை மீட்டுத்தருவாளா திருவக்கரை வக்கிரகாளியம்மன்? Posted on 21-Jul-2017 இரட்டை இலையை மீட்டுத்தருவாளா  திருவக்கரை வக்கிரகாளியம்மன்?

விழுப்புரம், ஜூலை 21-
அதிமுக இப்போது இரு அணிகளாக பிரிந்து செயல்படுகிறது. இந்நிலையில் அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்ற கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்கள். 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் ஆகியோருடன் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்று வழிபாடு செய்துள்ளார். 

சுமார் 15 நிமிடங்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் நினைத்த காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம். மனம் அமைதி பெறும், உயர் பதவியில் சிறந்து விளங்க முடியும் என்பதும் ஐதீகமாகும். 

இந்நிலையில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மனைவி, மகள் என குடும்ப சகிதமாக விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் உள்ள வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி சென்றுள்ளார். 

அங்கு குண்டலினி சித்தர் ஜீவ சமாதியில் 10 நிமிடம் அமர்ந்து தியானம் செய்தவர், வக்கிரகாளியம்மன் மூலஸ்தானத்தில் அருகே சென்று கண்களை மூடியவாறு சுமார் 35 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தினகரன் ஆதரவாளர்களோ திகார் சிறையில் இருந்து தினகரன் ஜாமினில் வெளியே வந்ததும் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். 

அப்போது  அவர் 1989ல் இரண்டாக பிளவுபட்டு கிடந்த அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு யாகம் நடத்தினார். இதற்கு பிறகுதான் கட்சியையும், சின்னத்தையும் ஜெயலலிதா மீட்டார் என்பது வரலாறு. 

அதுபோல  நியும் அக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வா என்று கூறி அனுப்பி வைத்துள்ளார் சசிகலா என்று கூறப்படுகிறது. அதன்படித்தான் தினகரன் இங்கு வந்துவிட்டுச் சென்றுள்ளார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதனையறிந்த ஓபிஎஸ் அணியின் எம்பிக்கள் லட்சுமணன், ராஜேந்திரன், சத்தியபாமா ஆகியோர் கடந்த 13ம் தேதி திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து விட்டுச் சென்றுள்ளனர். 

யாரையும் நம்பி பயனில்லை. இறைவனிடம் சரணாகதி அடைவோம் என்ற முடிவுக்கு இரு அணிகளும் வந்து விட்டன. ஆக மொத்தத்தில் ஜனாதிபதி தேர்தலும் (வாக்குப்பதிவு) முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அரசியல் நோக்கர்கள் தெரிவித்த கருத்துப்படி என்னதான் நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label