OUR CLIENTS
தஞ்சை அருகே தீவிபத்தில் 52 வீடுகள் எரிந்தன ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தஞ்சை அருகே தீவிபத்தில் 52 வீடுகள் எரிந்தன ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் Posted on 21-Jul-2017 தஞ்சை அருகே   தீவிபத்தில் 52 வீடுகள் எரிந்தன ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

அய்யம்பேட்டை, ஜூலை 21 -
தஞ்சை அருகே சக்கராப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 52 வீடுகள் எரிந்து, ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையை அடுத்து சக்கராப்பள்ளி என்ற இடம் உள்ளது. இங்குள்ள மேட்டு தெரு குப்பைமேட்டில் எரிந்த தீ நள்ளிரவு 12 மணியளவில் முகமதியார் காலனியில் வசிக்கும் ரஹமத் துன்னிஷா என்பவரின் கூரை வீட்டில் பரவி தீ பிடித்தது.

 இந்த தீ மளமளவென்று பக்கத்து வீடுகளிலும் பரவியது.  இதனை அறிந்து பொதுமக்கள் தங்களது பொருட்களை அப்படியே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று வெளியே ஓடி வந்து விட்டனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

இந்த தீ விபத்தில் 3 பசுமை வீடு, 10 ஓட்டு வீடு உள்பட 52 வீடுகளில் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, பாபநாசம் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். 

சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. மேலும் பொதுமக்களின் உடமைகள் அனைத்து எரிந்து சேதமானது. 4 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்துவிட்டன.

இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமைச்சர் துரைக்கண்ணு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பள்ளிவாசல் மற்றும் பள்ளிக்கூடம், திருமண மண்டபங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்தார். 

மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் உதவி பொருட்களை வழங்கினார். மேலும் தனது சொந்த நிதியிலிருந்து அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

சக்கராப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ளதால் அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அமைச்சருடன் கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் ராணி, முன்னாள் ஒன்றிய தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னால் எம்.எல்.ஏ ராம்குமார் உள்பட பலர் வந்திருந்தனர். 

தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், டி.எஸ்.பி. செல்வராஜ் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்தில் எரிந்த வீடுகளை பார்வையிட்டனர். கலெக்டர் அண்ணாதுரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் தீ விபத்தில் எரிந்த ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சான்றிதழ்கள் முகாம் அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  இந்த தீவிபத்து அய்யம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label