OUR CLIENTS
ஊழலுக்கு எதிராக போர்க்கொடி: கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு
ஊழலுக்கு எதிராக போர்க்கொடி: கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு Posted on 21-Jul-2017 ஊழலுக்கு எதிராக போர்க்கொடி: கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு

சென்னை, ஜூலை 21-
"மக்களின் பையில் இருந்து பணத்தை திருடுபவர்களுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம்" என்று கூறிய கிரண்பேடி கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடப்பதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் குற்றம் சாட்டினார்.  மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த துணிச்சலான விமர்சனத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களிடமும், பொதுமக்களிடமும் அமோக ஆதரவு கிடைத்தது. இதனால் தமிழக அமைச்சர்கள் அதிருப்தி அடைந்தனர். கமல்ஹாசன் எது சொல்வதாக இருந்தாலும் அரசியலுக்கு வந்து சொல்ல வேண்டும். மேலும் பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை தர வேண்டும் என்று அமைச்சர்கள் கூறினார்கள். 

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன், “தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை இ-மெயில் மூலம் அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ரசிகர்கள், பொதுமக்கள் தமிழக அரசின் இணைய தளத்தில் உள்ள அமைச்சர்களின் முகவரிக்கு  புகார்களை அனுப்பத் தொடங்கினார்கள். 

இது அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  லட்சக்கணக்கானவர்கள் புகார்களுடன் படையெடுத்ததால் துறை தலைவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் முக்கிய இணைய தளங்கள் முடக்கப்பட்டன. இதனால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புகார்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் பொது மக்களின் புகார்களை எதிர்கொள்ள பயந்து போய் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்றாலும் நடிகர் கமல்ஹாசன் விடவில்லை. நேற்று    மீண்டும் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

  அதில் அவர், “தமிழ்நாட்டில் டெங்கு பரவி உள்ளது. அதை கவனி அரசே. உமை யாம் கவனிப்போம். முடியவில்லையா? நகர்ந்து அந்தப் பக்கம் போய் விடு” என்று கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மீண்டும், மீண்டும் விசுவரூபம் எடுத்து அரசை குற்றம் சாட்டுவது அமைச்சர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருக்கு அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பா.ஜனதா தலைவர்கள் தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் கமல்ஹாசனை ஆதரிக்கிறார்கள். மாணவர்களின் ஆதரவும் கமலுக்கு கிடைத்துள்ளது.  இதேபோல் புதுவை கவர்னர் கிரண்பேடியும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கிரண்பேடி நேற்று    சென்னையில் சின்மயா மி‌ஷன் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது நிருபர்கள் கமல்ஹாசன் விவகாரம் குறித்து கிரண்பேடியிடம் கேட்டனர். அவர் கூறியதாவது:  ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் பையில் இருந்து பணத்தை திருடுபவர்களுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம். எல்லோரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.  கர்நாடக ஜெயிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவிடம் பணம் வாங்கி கொண்டு வி.வி.ஐ.பி. வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். அதை டி.ஐ.ஜி. ரூபா வெளிப்படுத்தி இருப்பது சரியான நடவடிக்கை ஆகும்.  இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் ஆர்.நல்ல கண்ணு கூறியதாவது:  ஊழல் பற்றி கமல்ஹாசன் துணிச்சலுடன் வெளிப்படையாக விமர்சனம் செய்திருப்பது பாராட்டுக்குரியது. என்றாலும் கமல்ஹாசனின் முயற்சிக்கு பெரிய அளவில் மாற்றம் ஏற்படுமா என்று தெரியவில்லை. ஆனால் கமல்ஹாசனின் குரலால் மக்கள் மத்தியில் ஊழல் பற்றி சிறிதளவாவது விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியதாவது:  தமிழ்நாட்டில் சிஸ்டம் சரி இல்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் துணை நிற்க வேண்டும். அவர் அ.தி.மு.க. மீதுள்ள கோபம் காரணமாக தி.மு.க. பக்கம் போனால், அது அர்த்தம் இல்லாததாக போய் விடும். இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், “கமல் தெரிவித்துள்ள புகார்களை தனி மனித சுதந்திரமாக பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதுபோல விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்களும், வக்கீல்களும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Label