OUR CLIENTS
டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பெங்களூரு சிறையில் தாக்கப்பட்ட கைதி உடல்நிலை மோசம்
டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பெங்களூரு சிறையில் தாக்கப்பட்ட கைதி உடல்நிலை மோசம் Posted on 21-Jul-2017 டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பெங்களூரு சிறையில் தாக்கப்பட்ட கைதி உடல்நிலை மோசம்

பெங்களூரு, ஜூலை 21-
டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பெங்களூரு சிறையில் தாக்கப்பட்ட கைதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகளை டி.ஐ.ஜி. ரூபா அம்பலப்படுத்திய பின்பு, அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பு கைதிகளும், சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மற்றும் பெங்களூரு சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக மற்றொரு தரப்பு கைதிகளும் மாறினார்கள். 

கடந்த 15-ந் தேதி பரப்பனஅக்ரஹாரா சிறையில் சத்திய நாராயணராவ் மற்றும் ரூபா ஆகியோர் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூபாவுக்கு ஆதரவாக சில கைதிகள் செயல்பட்டதாகவும், கிருஷ்ணகுமாருக்கு எதிராக ரூபாவிடம் கைதிகள் சில புகார்களை கூறியதாகவும் தகவல் வெளியானது. 

இதனால் கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் பெங்களூரு சிறையில் இருந்த 32 கைதிகள் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டார்கள். அவர்களில் 3 கைதிகளை பெலகாவி இண்டல்கா சிறைக்கு அழைத்து சென்றபோது, அவர்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு செல்லும் காட்சிகள் வெளியானது. 

மேலும் அந்த 3 கைதிகளும் ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கடுமையாக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. 

இந்த நிலையில், பெலகாவி இண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்ட 3 கைதிகளில் ஒருவர் பெயர் அனந்தமூர்த்தி என்று தெரியவந்துள்ளது.  ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அவரை அடித்து, உதைத்ததுடன், அவரது மர்மஉறுப்பிலும் தாக்கி இருந்ததாக தெரிகிறது. இதனால் இண்டல்கா சிறையில் கடந்த 3 நாட்களாக அவர் வலிதாங்க முடியாமல் துடிதுடித்தார்.  

இதற்காக அவருக்கு இண்டல்கா சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் கைதி அனந்தமூர்த்தி சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 

பெலகாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கைதி அனந்தமூர்த்தியை போலீசார் அழைத்து சென்றதாகவும், அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பின்பு அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் இருந்து இண்டல்கா சிறைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அனந்தமூர்த்தியின் உடல்நிலை மோசம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Label