OUR CLIENTS
எனக்கு இன்னொரு பேரு இருக்கு!
எனக்கு இன்னொரு பேரு இருக்கு! Posted on 29-Jul-2017 எனக்கு இன்னொரு பேரு இருக்கு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார், ஆத்மிகா. இவர் நடிகை மட்டுமல்ல, இனிய குரல் வளம் கொண்ட பாடகியும் கூட. அவரிடம் பேசினோம். “நான் கோயமுத்தூரை சேர்ந்த தமிழ்ப் பெண். படிப்புக்காக கோவை, ஊட்டி, சென்னைன்னு ஒரு பெரிய ரவுண்டு வந்தேன். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சு, கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட்டாகி, பெங்களூருல ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஆறு மாசம் வேலை பார்த்தேன். ஒரே இடத்துல உட்கார்ந்து, ஒரேமாதிரி ஒர்க் பண்றது எனக்கு போரடிச்சது. என்ன பண்ணலாம்னு மனசு அலைபாயவே, நமக்கு சரியான இடம் சினிமாதான்னு முடிவு பண்ணி, தைரியமா களத்துல குதிச்சேன்.

ஆர்வக்கோளாறுல, கிடைச்ச வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்தேன். அப்பா பானுசந்திரனும், அம்மா நளினியும் என்னை என்கரேஜ் பண்ணாங்க. தமிழ் மேலயும், மியூசிக் மேலயும் எனக்கு அம்புட்டு ஆசை. அதனாலதான் கர்நாடகம், இந்துஸ்தானி கத்துக்கிட்டேன். ஏற்கனவே ஒரு பக்தி ஆல்பத்துல, சந்தோஷ் மியூசிக்ல ரெண்டு பாட்டு பாடியிருக்கேன். சரியான வாய்ப்பு கிடைச்சா, மற்ற ஹீரோயின்களுக்கும் பாடுவேன். நம்ம மியூசிக் டைரக்டர்கள் மனசு வெச்சு, நல்ல வாய்ப்பு கொடுப்பாங்கன்னு நம்பறேன். நடிப்புல ஆர்வம் ஏற்பட்ட பிறகு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. என்னால அந்த வேலையை ஒழுங்கா பண்ண முடியுமான்னு சந்தேகம் வந்தது. 

நடிப்புல நல்ல அனுபவத்தை வளர்த்துக்க முடிவு பண்ணேன். புடவை, நகை, ஸ்வீட் அப்படி இப்படின்னு நிறைய விளம்பரங்கள்ல நடிச்சேன். கேமரா பயம் போச்சு. அதுக்குப் பிறகு குறும்படங்கள்ல நடிச்சேன். கொஞ்சநஞ்சம் இருந்த தயக்கமும் போயே போச்சு. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவேன்னு நம்பிக்கை வந்தது. இந்த நேரத்துலதான் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, இன்டர்நெட்டுல வெளியான என் போட்டோக்களை பார்த்து, ‘மீசையமுறுக்கு’ படத்துல நடிக்க கேட்டார். முதல்ல கஷ்டமான ஒரு டயலாக்கை கொடுத்து பேச வெச்சார். பிறகு எல்லா டெஸ்ட்டிலும் செலக்ட்டாகி ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன். 

நடிப்பை பொறுத்தவரை ரேவதி, ஷாலினி, த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா இவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க நடிச்ச படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். மியூசிக்ல இளையராஜாவையும், ஏ.ஆர்.ரகுமானையும் பிடிக்கும். பின்னணி பாடறதுல சித்ரா, சுஜாதா, ஸ்ரேயா கோஷல் குரல் பிடிக்கும். நான் அவங்களை மாதிரியோ, இவங்களை மாதிரியோ வரணும்னு ஆசைப்படலை. ஆத்மிகா மாதிரி வரணும். நடிப்புல தனித்துவம் காட்டி ஜெயிக்க ஆசைப்படறேன். யாரையும் காப்பியடிக்க பிடிக்காது. கிளாமரா நடிப்பேனான்னு தெரியாது. நெக்ஸ்ட் டோர் கேர்ள் கேரக்டர்ல நடிக்க ஆசை” என்று படபடவென்று பேசிய ஆத்மிகாவுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. கேட்டால், ‘அது சஸ்பென்ஸ். இப்ப சொல்ல மாட்டேன்’ என்று மழுப்புகிறார்.

Label