OUR CLIENTS
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் கட்சியை வழிநடத்த எனக்கே அதிகாரம் :டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் கட்சியை வழிநடத்த எனக்கே அதிகாரம் :டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி Posted on 02-Aug-2017 தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் கட்சியை வழிநடத்த  எனக்கே அதிகாரம் :டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி

சென்னை, ஆக.2-
அ.தி.மு.க.வை வழிநடத்தும், உரிமை எனக்கே உள்ளது என்றும் 4-ம் தேதிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி அணியில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சசிகலாவும், தினகரனும் திடீரென ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை அமைச்சர்கள் வெளியிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட தினகரன் 60 நாட்கள் வரை பொறுமை காக்கப் போவதாக அறிவித்தார். தினகரனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

தினகரன் விதித்த கெடு 4-ம் தேதியுடன் முடிகிறது. அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள அவர் அதற்கான முயற்சிகளில் வேகம் காட்டி வருகிறார். வருகிற 5-ந்தேதி அன்று தினகரன் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க. அம்மா அணியினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு போட்டியாக முதல்-வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டம் நடந்தது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வை வழி நடத்துவது யார்? என்கிற போட்டியே தினகரனுக்கும், எடப்பாடி அணியினருக்கும் தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. தினகரன் இல்லாமலேயே எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று அமைச்சர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தினகரனோ, கட்சியை விட்டு கொடுக்க தயாராக இல்லை.

இந்த நிலையில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜரான தினகரன், அ.தி.மு.க.வை வழிநடத்தும், உரிமை எனக்கே உள்ளது என்று அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-

கட்சியின் பொதுச்செயலாளர் செயல்பட முடியாமல் இருக்கும் நிலையில் இருக்கிறார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் உள்ளன. கட்சியின் தொண்டனாக, துணை பொதுச்செயலாளராக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கட்சியை வழி நடத்தி செல்லும் முழு அதிகாரமும் எனக்கே உள்ளது. 60 நாட்கள் பொறுத்திருக்கப் போவதாக நான் கூறி இருந்தேன். அந்த கெடு வருகிற 4-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன. அதன் பின்னர் எனது செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை நீங்களே பார்ப்பீர்கள். அதுவரை பொறுத்திருங்கள்.

இதற்கு மேல் கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கட்சியின் நலனுக்காகவே செயல்பட உள்ளேன். யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை.

2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை குறி வைத்தே கட்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். எனது நடவடிக்கைகள் அனைத்தும் இனி கட்சி நலன் சார்ந்தே இருக்கும்.

கேள்வி:- ஆட்சியையும், கட்சியையும் எடப்பாடி பழனிசாமியே வழி நடத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் காலையில் கூறி இருக்கிறாரே?
பதில்:- ஜெயக்குமார் எனக்கு நல்ல நண்பர். ஏதோ ஒரு பயத்தில் அவர் இதுபோன்று தொடர்ந்து பேசி வருகிறார். எல்லாம் சரியாகிவிடும். பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்துவதே எனது முதல் பணியாகும். அந்த பணியை நான் தொடர்ந்து மேற்கொள்வேன். 4-ம் தேதிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும்.

கே:- கமலின் குற்றச்சாட்டால் அமைச்சர்கள் அவருடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்களே?
ப:- கமல் தனது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். அவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். அதே நேரத்தில் அமைச்சர்களும் கமலை ஒருமையில் பேசுவதை விட்டு விட்டு குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கே:- மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதே?
ப:- இதுபோன்று யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதில் வெற்றி பெற வேண்டும். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதன் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

அ.தி.மு.க. அம்மா அணிக்கு எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்குவதாக அமைச்சர்களும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்திலேயே நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டமும் நடந்தது.

இந்த நிலையில், கட்சியை வழி நடத்திச் செல்லும் அதிகாரம் தனக்கே உள்ளது என்று தினகரன் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Label