OUR CLIENTS
கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து இருப்பார்
கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து இருப்பார் Posted on 02-Aug-2017 கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து இருப்பார்

சென்னை, ஆக.2-
கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து இருப்பார் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:
கேள்வி: 2016 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கலாமே என்று எப்போதாவது நினைத்து பார்த்தீர்களா?
பதில்: ஒருபோதும் அதைபற்றி கவலைப்பட்டது இல்லை. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார்கள். எங்கள் கட்சி தற்போது முன்பைவிட சிறப்பான நிலையில் உள்ளது. விசுவாசமான தொண்டர்களும், தலைவர்களும் இப்போது கட்சியில் உள்ளனர். எங்களை விட்டு வெளியே போனவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏராளமானோர் எங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.
மு.க. ஸ்டாலின் இப்போது சரியாக செயல்படவில்லை. அவர் சிலர் சொல்வதை மட்டுமே கேட்டு செயல்படுகிறார். சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது தனது பட்டுசட்டை கிழிந்து போனது பற்றிதான் கவலைப்பட்டார். சட்டையில் உள்ள பட்டன் காணாமல் போய்விட்டது என்பதை அனைவரிடமும் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன.
கே: தமிழக அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் தி.மு.க. முக்கியத்துவம் கொடுத்து செயல்படவில்லை என்று கூறுகிறீர்களா?
ப: இந்த அரசு தானாகவே கவிழ்ந்து விடும். சட்டசபையில் தி.மு.க.வினர் சபாநாயகரை தாக்க முயன்றனர். அவரை தாக்கி என்ன ஆகப்போகிறது. தி.மு.க.விடம் 89 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் எதையும் செய்ய முடியவில்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் என 100 எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் கையில் இருக்கிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி மட்டும் இப்போது தீவிர அரசியலில் இருந்திருந்தால் அவர் சிறப்பாக செயல்பட்டு எதையாவது செய்திருப்பார்.
அவர் தற்போது தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் தி.மு.க.வுக்கு ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக மட்டுமே இருக்கிறார். இன்னும் அவர் தலைவராக வரவில்லை. அவர் செயல்படாத தலைவராக இருக்கிறார்.
தினமும் எங்காவது செல்கிறார். அங்கு கூட்டம் கூட வேண்டும் என்று விரும்புகிறார். கருணாநிதியும் இதைத்தான் செய்தார். அவருக்கு கூட்டம் கூடும். ஆனால் ஓட்டு எம்.ஜி.ஆருக்கு சென்றுவிடும்.
கே: பாரதிய ஜனதா பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத அரசை செயல்படுத்துவோம் என்று கூறினார்கள். இப்போதும் அதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் நடக்கும் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரியை கொண்டுவரும்போது, ஒரே நாடு, ஒரே வரி என்றார்கள். அதன்பிறகு இப்போது மத்திய ஜி.எஸ்.டி. வரி, மாநில ஜி.எஸ்.டி. வரி என்று பிரித்து வசூலிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. எல்லா துறைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்றார்கள். ஆனால் சினிமா துறைக்கு மட்டும் வேறுமாதிரி இருக்கிறது.
கே: தமிழ்நாட்டில் தற் போதைய அரசியல் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?
ப: தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியை தக்க வைப்பது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் நடப்பது பற்றியோ, மக்களை பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை.
ஓ. பன்னீர்செல்வம் ஒரு முனிவர் போல பேசுகிறார். அவர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து உறுதிமொழி எடுத்திருக்கிறார். அது என்ன புத்தருக்கு ஞானோதயம் கொடுத்த போதிமரமா? 
ஸ்டாலினாலோ, ஓ. பன்னீர்செல்வத்தினாலோ இந்த அரசை வீழ்த்த முடியாது. கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக இதை செய்திருப்பார்.
கே: எதிர்க்கட்சி என்ற முறையில் தே.மு.தி.க. என்ன செய்து கொண்டிருக்கிறது?
ப: எதிர்க்கட்சியால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. எனது கட்சியை எதிர்காலத்துக்காக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் சென்னையில் இருக்கும்போதெல்லாம் தினமும் கட்சி அலுவலகத்திற்கு வருகிறேன். மாநிலம் முழுவதும் இருந்து வரும் தலைவர்களையும், தொண்டர்களையும் சந்திக்கிறேன்.
சில டி.வி.க்கள் எங்களுக்கு ஒரு சதவீதம் ஓட்டுதான் இருப்பதாக கூறுகிறார்கள். அது தவறானது. எங்களது உள்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியில் அனைத்து மட்டத்திலும் தேர்தல் நடத்தி கட்சியை வலுப்படுத்துவோம்.
விசுவாசமுள்ள தொண்டர்கள் பதவிக்கு வருவார்கள். எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. நான் கதிராமங்கலத்திற்கு சென்றிருந்தபோது மக்கள் அமோகமாக வரவேற்றார்கள். தேர்தல் வரும்போது எங்களது வலுவை நிரூபிப்போம்.
கே: உள்ளாட்சி தேர்தலை பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்களா?
ப: உள்ளாட்சி தேர்தல் இப்போது நடக்க வாய்ப்பு இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் எங்களது வலுவை, எங்கள் தாக்கத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
கே: தேர்தலை சந்திப்பது குறித்து எப்படி நம்பிக்கையோடு கூறுகிறீர்கள்?
ப: மக்களை வைத்துதான் கூறுகிறேன். தற்போது ஜெயலலிதா இல்லை. சசிகலா ஜெயிலில் இருக்கிறார். திவாகரன்-&தினகரன் இணைவது பற்றிதான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இணைவதால் எடப்படி பழனிசாமி அரசுக்குதான் பிரச்சனை. ஆகஸ்டு 5-ம் தேதி கெடு விதித்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்போம். நாங்கள் அடுத்த தேர்தலில் சிறப்பான வெற்றியை பெறுவோம்.
கே: தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. கூட்டணி வைக்க வேண்டியது இருக்குமே?
ப: தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி நாங்கள் பேசிக் கொள்வோம். ஏன் கூட்டணி வைக்க வேண்டும். அது அவசியமா? நாங்கள் கடந்த காலத்தில் தனியாக நின்றிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்திருக்கிறோம். கடந்த தேர்தலில் திராவிட கட்சிகளை புறக்கணித்து தேர்தலை சந்தித்தோம். நாங்கள் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் மக்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை, புறக்கணித்து விட்டார்கள். எனவே அடுத்த தேர்தலில் எங்கள் செல்வாக்கை வைத்து போட்டியிடுவோம். கூட்டணி தேவை என்றால் அப்போது அதைப்பற்றி பார்த்துக் கொள்வோம்.
கே: ரஜினிகாந்த்க-மல் அரசியலுக்கு வரப்போகிறார்களா?
ப: ரஜினிகாந்த் எப்போதும் இதைப்பற்றி பேசமட்டும்தான் செய்வார் (சிரித்துக்கொண்டே). அதை அவர் சரியாக கடைபிடிப்பார். அவரால் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது. கடந்த காலங்களில் எதை செய்தாரோ, அதைத்தான் இப்போதும் செய்வார். நான் தைரியமாக அரசியலில் குதித்தபோது அவர் பாராட்டினார். கமல்ஹாசன் அரசியலுக்கு வரமாட்டார். அவர் ஊழல் பற்றி கேள்வி கேட்டதில் எந்த தவறும் இல்லை. தமிழக அரசில் ஊழல் மோசமான நிலையில் உள்ளது.
கே: தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதால் பாரதிய ஜனதா காலூன்ற பார்க்கிறதே?
ப: பாரதிய ஜனதா வளர்ச்சிக்கு இங்கு வாய்ப்பில்லை. நான் கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய இடங்களுக்கு சென்றபோது எங்கள் கட்சிக்கு அதிக ஆதரவு இருப்பதை பார்க்க முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Label