OUR CLIENTS
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை! Posted on 09-Aug-2017 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின்  உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை!

ராமநாதபுரம், ஆக.9-
அகில இந்திய புண்ணியஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், தமிழக சுற்றுலாத்தலங்களில் ஒன்றுமாக விளங்குவது ராமமேஸ்வரம். இங்குள்ள ராமநாதசுவாமி கோயில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலமாகும். ராமநாதசுவாமியை தரிசிக்க தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து யாத்ரீகர்கள் புனிதப்பயணம் வருகிறார்கள். இந்த ராமநாதஸ்வாமி கோயிலுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உதவி ஆணையராக பழனி தண்டாயுதபாணி கோயிலிலிருந்து பணிமாறுதலாகி வந்தார் பாலகிருஷ்ணன். இணை ஆணையரின் நேர்முக உதவியாளராக அலுவலகத்தில் இருந்து பணி பார்க்க வேண்டியவர். இவர் அலுவலக கோப்புகளை பார்க்காமல் உள்துறையில் கண்ணமிட ஆரம்பித்தார். உள்துறையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிந்திக்க ஆரம்பித்தார்.

உள்துறை பேஷ்கார் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் எனக்கு வாரம் ஒரு தொகையை தர வேண்டும் என பேச்சுவார்த்தை தொடங்கினார். பேச்சுவார்த்தை தோல்வியடையவே தானே களத்தில் இறங்கினார். காலை 4 மணிக்கு எல்லாம் சிவமயம் எம்பெருமான் சிவபெருமானுக்கு பணி செய்து கிடப்பதே என்கடமை என்று சென்று ஸ்படிகலிங்க பூஜையில் இருந்தே தனது கல்லாக் கட்டும் பணியை தொடங்க ஆரம்பிப்பாராம். ராமநாதசுவாமி கோயிலில் ருத்ராபிஷேக பூஜை என்பது பக்தர்கள் ரூ.ஆயிரத்து 500 கட்டி பூஜை செய்வார்கள். ஆனால் இவர் சன்னதியில் பணிபார்க்கும் போது பூஜை டிக்கெட் கவுன்டரில் ருத்ராபிஷேக டிக்கெட் யாருக்கும் வழங்காதே. வடக்கு கேட்டில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் இருக்கிறார். அவரை பார்க்கச் சொல் என்று வாய்மொழி உத்தரவு இடுவாராம். உடனே உதவி ஆணையரை சென்று சந்திக்கும் யாத்ரீகர்களிடம் எத்தனை பேருங்க என்பார். உதவி ஆணையர் 4 நபர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 தர வேண்டும் . தந்தால் சாமி முன்னால் உட்கார்ந்து தரிசனம் செய்யலாம் என்பார்.

யாத்ரீகர் மேற்படி உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டவுடன் பணம் பக்கத்தில் உள்ள பிரசாத கடைக்கு கை மாறும். அவ்வாறு பணம் வாங்கியவுடன் பிரசாதக்கடையில் இருந்து சிக்னல் கிடைத்தவுடன் யாத்ரீகர்களை சாமி முன்னால் உட்கார வைத்து சாமி தரிசனம் செய்து வைப்பதோடு மாலை மரியாதை அனைத்தும் செய்து அனுப்புவாராம் இந்த பாலகிருஷ்ணன். இப்படி கோயிலுக்கு வரும் வருவாயை பல வழிகளில் சுவாஹா செய்து விடுவாராம் இவர். இதைவிட கொடுமை என்னவென்றால் இப்படி கோயிலுக்காக உழைக்கிறேன் என்று தன்னை கூறிக்கொள்ளும் இவர் வாரநாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பொதுவாக கோயிலில் நல்ல கூட்டம் இருக்கும். 

இந்த நாட்களில் பக்தர்களிடம் வசூல் செய்து கொண்டு பழனிக்குச் சென்றுவிடுவாராம். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் எந்தவிதமான விடுப்பும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருந்துவிட்டு மீண்டும் வியாழக்கிழமை வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுவாராம். என்ன சார் இப்படி விதிமுறைகளை மீறி செய்கிறீர்கள் என்று சக அலுவலர்கள் கேட்டால் நான் உதவி ஆணையர் தெரியுமா என்பார். இவர் தனது பணிநிலை தகுதிக்கான குடியிருப்பை பயன்படுத்தாமல் வாடகைக்கு விட்டு வருவாயை பெருக்க கூடிய திருக்கோயிலுக்கு சொந்தமான குளிர்சாதன அறையில் தனது தாயாருடன் எளிதில் தீப்பற்றி விபத்தை ஏற்படுத்த கூடிய காஸ் அடுப்பை பயன்படுத்தி வருகிறார். இவர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உதவி ஆணையராக பொறுப்பேற்ற நாளில் இருந்து மோடி காட்டேஜ் என்ற குளிர்சாதன அறையில் எந்தவிதமான வாடகையும் செலுத்தாமல் தங்கி வருகிறார். இதனால் பல ஆயிரங்கள் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

எது எப்படியோ இப்பொழுது ராமநாதசுவாமி கோயிலின் இணை ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் மங்கையர்க்கரசி நேர்மையான பணி செய்து பெயர் பெற்றவர். இவரையும் தனது மனைவி வழியில் சொந்தக்காரர், நான் சொல்வதைத்தான் கேட்பார் என்று மிரட்டி வருகிறாராம். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் மற்றும் திருக்கோயில் இணை ஆணையர் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் மீது துறை ரீதியான விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் நல்லது என்கின்றனர் பக்தர்களும், சமூக ஆர்வலர்களும். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label