OUR CLIENTS
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி!
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி! Posted on 09-Aug-2017 காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி!

வேலூர், ஆக.9-
வேலூர் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம். அதிலும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கு எந்த அதிகாரிகளும் வருவதும் கிடையாது. எந்த ஒரு ஆய்வும் நடத்துவதும் கிடையாது. ஒரு வேளை அப்படி ஆய்வு செய்து இருந்தால் இதுபோன்ற போக்குகள் அவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியவில்லையோ என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து ஆகும். 

இந்த பள்ளியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் பிரச்னை தீராத பெரும் பிரச்னையாக உள்ளது. அதிலும் மத்திய உணவு உண்ணும் நேரத்தில் அந்த குடிநீர் குழாயானது பெரும் யுத்தகளம் போல் காட்சியளிக்கும். இங்கு நான்கு முதல் ஐந்து குடிநீர் குழாய்கள் அமைத்துள்ளனர். எதுவும் செயல்பாட்டில் இல்லை. 

ஒரே ஒரு குடிநீர் குழாயில்தான் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரது நெரிசலுக்கு மத்தியில் உபயோகத்தில் உள்ளது. அதுவும் எப்படிப்பட்ட குழாய் என்றால் அந்த குழாயை பார்த்தாலே தெரியும். டெங்கு காய்ச்சலுக்கு வித்திடும் வகையில் அமைந்திருக்கும், பாசி பிடித்துப்போய், உணவு கழிவுகள் ஒருபுறம். அந்த குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரும் அங்கேயே நின்றுவிடும். அங்கு தேங்கிய கழிவு நீரால் பலதரப்பட்ட கொசுக்களும், விஷக்கிருமிகளும் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இதைப் பற்றி ஒன்றுமே கண்டுகொள்ளாமல் உள்ளது மாவட்ட கல்வி நிர்வாகம். இது ஒருபுறம் இருக்க கழிவறை என்பது ஏதோ ஒரு புதருக்குள் உள்ளது போன்று காட்சியளிக்கின்றது. இந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் கழிவறை இல்லாத காரணத்தால் திறந்த வெளியில் தான் சிறுநீர் கழித்து வருகின்றனர். மலம் கழிக்கவேண்டும் என்றால் தடுப்பு சுவருக்கு வெளியே தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் கழிவறை வசதி கிடையாது, என்றால் இதிலே தெரிந்து கொள்ளலாம். இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இரண்டு இடங்களில் எப்பொழுதும் உடைந்த நிலையிலே தான் இருக்கும். இந்த பள்ளியின் விளையாட்டு மைதானம் என்பது ஒரு பொதுவழி சாலையாக அமைந்துவிட்டது. 

இங்கே இரவு நேரங்களில் மது, மாது, சூது என பல்வேறு தீய நிகழ்வுகள் அரங்கேறி வருவது எப்பொழுதும் போல் ஒன்றாக சகஜமாகிவிட்டது. இரவு நேரங்களில் காவல்துறை இந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டால் தேடப்படும் குற்றவாளிகள் எளிதாக பிடிபடுவார்கள். பகல் நேரத்தில் பள்ளியின் விளையாட்டு மைதானமாகவும் இரவு நேரங்களில் குற்றவாளிகளுக்கு தங்கும் விடுதியாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது கடந்த சில நாட்களாக பாம்பு பண்ணையாகவும் மாறிக்கொண்டு வருகிறது. பள்ளியை சுற்றிலும் காகித குப்பைகள் சூழ்ந்துள்ளன. சுத்தம் என்பது எங்கே அது என்ன விலை என்ற அளவிற்கு ஆளாகி உள்ள அவல நிலையால் இங்கு பாம்புகள் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு சான்றாக கடந்த வாரம் கொடிய விஷம்கொண்ட கட்டுவிரியன் பாம்பு வகுப்பறைக்குள் வாசம் புரிந்ததை கண்ட மாணவர்கள் ஆசிரியர் முன்னிலையில் அந்த பாம்பை அடித்து கொன்றனர். 

மேலும் இதே போல் பாம்பு எங்கள் வகுப்பறைக்கும் வந்துவிடுமோ என அச்சத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் உறைந்துபோய் உள்ளனர். பள்ளிநேரம் எப்பொழுது முடியும் என மாணவர்களும், ஆசிரியர்களும் ஓட்டம் பிடிப்பதிலேயே குறியாக உள்ளனர். அங்கே வரும் சில சமூக ஆர்வலர்கள் சிலர் இது பள்ளிக்கூடமா அல்லது பாம்பு பண்ணையா என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். சமீபத்தில் கூட மரம் நடும் விழா நடந்தது. அது வெறும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கத்தான் என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இப்படி மரம் நாடும் அளவிற்கு அக்கறை உள்ளவர்களுக்கு ஏன் கழிவறை மீதோ, குடிநீர் மீதோ  குப்பைகள் தேங்கி கிடப்பது. மழைநீர் சேமிப்பு தொட்டிகள் எல்லாம் இங்கே கோப்பைக்கொட்டும் தொட்டிகளாக பரிணாமம் பெற்றுள்ளதையும் காணலாம். 

இது எல்லாம் ஏன்  இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. இதே போக்கில் பள்ளி  இயங்கினால் டெங்கு, மலேரியா, பாம்புக் கடி, பூச்சிக் கடி, பால்வினை நோய், தொற்று நோய் என பல்வேறு வகையில் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்  நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும, மாவட்ட கல்வித்துறையும் என்னதான் தீர்வு காணப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Label