OUR CLIENTS
போருக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடுவதுதான் செங்கோட்டையனின் வீரமா?
போருக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடுவதுதான் செங்கோட்டையனின் வீரமா? Posted on 10-Aug-2017 போருக்கே வராமல் புறமுதுகிட்டு  ஓடுவதுதான் செங்கோட்டையனின் வீரமா?

சென்னை, ஆக.10-
வீராவேசமாக பேசுவதும், விவாதத்துக்கு வாருங்கள் என்று அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுவதும் தான் செங்கோட்டையனின் வீரம் போலிருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் பற்றி விவாதம் நடத்தத் தயாரா? என அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட நான், அவரது விருப்பப்படியே வரும் 12&ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் விவாதம் நடத்தலாம் என்று அறிவித்திருந்தேன்.

ஆனால், இதுகுறித்து பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்கள் மீதே வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் நிரபராதி என்று நிரூபித்து விட்டு வந்து என்னிடம் பேசட்டும் என்று கூறியிருக்கிறார். 

செங்கோட்டையனின் இந்தப் பேச்சு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பேச்சு போன்று இல்லை. தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவனின் பேச்சு போன்று தான் உள்ளது. என்னுடன் விவாதிக்கவும், எனது பேச்சுக்கு பதில் கூறவும் தயாராக இருந்த அமைச்சருக்கு இப்போது தான் என் மீது வழக்கு இருப்பது குறித்த ஞானோதயம் பிறந்திருக்கிறது போலிருக்கிறது. என் மீது வழக்கு இருப்பது உண்மை தான். அது விதிமீறல் குறித்த அடிப்படை ஆதாரமற்ற பொய்வழக்கு ஆகும். மருத்துவக் கல்லூரிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த அனுமதி சரியானது என்று உச்சநீதிமன்றமே கூறிய பிறகு பழிவாங்கவே என் மீது வழக்குத் தொடரப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை குறித்த விவாதத்திற்கு இது எந்த வகையில் தடை என்பது எனக்குத் தெரியவில்லை.

1991&96 காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது செய்த ஊழலுக்காக செங்கோட்டையன் மீது 3 வழக்குகள் தொடரப்பட்டதும், அவற்றில் இரு வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 2001 பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதும், பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவ்வழக்குகளில் இருந்து அவர் எப்படி விடுதலையானார் என்பதும் உலகமறிந்த வரலாறு. அவைபற்றியெல்லாம் பேச விரும்பவில்லை. பள்ளிக்கல்வித்துறை குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வரும்படி தான் நான் அழைக்கிறேன்.

செங்கோட்டையன் உண்மையாகவே நேர்மைத் திலகமாக இருந்தால் வெளிப்படையான முறையில் விவாதிக்கலாம், அதன் மூலம் தமிழக அரசியலில் ஆக்கப்பூர்வமான கலாச்சாரத்தை ஏற்படுத்தலாம். இந்த விவாதம் கல்வித்துறை வளர்ச்சி சார்ந்தது தானே தவிர தனிநபர்களின் வெற்றி தோல்விக்கானது அல்ல. அதனால் வரும் 12&ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையனின் வருகைக்காக காத்திருப்பேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Label