OUR CLIENTS
நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு வரும் : அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை
நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு வரும் : அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை Posted on 10-Aug-2017 நீட் தேர்வு விவகாரத்தில்  நல்ல முடிவு வரும் : அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை

சேலம், ஆக.10-
நீட் தேர்வு விவகாரத்தில் இரண்டொரு நாளில் நல்ல முடிவு வரும் என சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சேலம் வந்தனர்.

அவர்கள் சுகாதார துறை அதிகாரிகள் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக உள்ளதா? என்பது குறித்து சேலம் சிறுமலர் பள்ளியில் வைத்து ஆய்வு நடத்தினார்கள். முன்னதாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதன் முதலாக இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவியது. பின்னர் கேரளா வழியாக தமிழகத்தில் பரவியது. இதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிககை எடுத்து வருகிறது. தற்போது இதுதொடர்பாக களஆய்வு நடத்தி வருகிறோம். அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேர் இறந்து உள்ளனர்.டெங்கு காய்ச்சலை தடுக்க 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். 3,500 சுகாதார ஆய்வாளர்கள் முகாம் நடத்தி டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

417 நடமாடும் மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி, தம்மம்பட்டி, வாழப்பாடி பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். ஒருவர் காய்ச்சல் என்று வந்தால் அவரை பரிசோதனை செய்து 24 மணி நேரத்திற்குள் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தர்மபுரியில் ஜிகா காய்ச்சலை எங்களுடைய மருத்துவக்குழுதான் கண்டுபிடித்தது. பின்னர் அந்த காய்ச்சல் தடுக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூரண நலம்பெற தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. நில வேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

நீட் விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை. தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். நேற்று முன்தினம் கூட நாங்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து விட்டு வந்து இருக்கிறோம். மத்திய அரசு கூட இதை செய்வதற்கு தயாராக இருக்கிறது. இதில் கொஞ்சம் சட்ட சிக்கல்கள் இருக்கிறது. மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு அதை உள்வாங்கி கொண்டு செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.

கடந்த ஓராண்டு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதே மாதிரி தொடர்ந்து இந்த ஆண்டும் ஒரு விதிவிலக்கை கேட்பதற்கு உண்டான சட்ட வழிமுறைகளை மத்திய அரசு சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் சொல்லி உள்ளோம். ஆகஸ்ட் 30-ந்தேதிக்குள் நாங்கள் அட்மி‌ஷன் முடிக்க வேண்டும். நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இரண்டு ஒரு நாட்களில் நல்ல முடிவு வரும்.

சி.பி.எஸ்.இ. மாணவர்களும் நம்முடைய மாணவர்கள். மாநில பாட திட்டத்தில் படித்தும் வரும் மாணவர்களும் நம்முடைய மாணவர்கள். மாணவர் சமுதாயத்தையும், பெற்றோர்களிடத்திலும் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தெளிவாக சொல்கிறேன். இரண்டொரு நாள் தயவு செய்து காத்திருங்கள். அரசு தன்னுடைய பகீரத முயற்சியை உச்சபட்ச அழுத்தத்தையும் மத்திய அரசிடம் கொடுத்து இருக்கிறோம்.

மத்திய அரசும், பாரத பிரதமரும், மத்திய அமைச்சர்களும் நீட் விவகாரம் தொடர்பாக கனிவோடு பரிசீலனை செய்து கொண்டு இருக்கிறார்கள். சட்ட சிக்கல்கள் இருக்கிறது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றுக்கொண்டால் கூட தமிழ்நாட்டிற்கு சிறப்பு அனுமதி கொடுப்பது குறித்து அவர்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.

என்ன வாய்ப்பு இருக்கிறோ? இரண்டொரு நாளில் தெரியவரும். தாமதபடுத்தி விடமாட்டோம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கும் முடிவும் இரண்டொரு நாளில் தெரியவரும். அதிகபட்சம் எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. 6 நாள் தான் மொத்த கவுன்சிலிங். 6 நாளில் கவுன்சிலங்கை முடித்து விடுவோம். ஆயிரம் எம்.பி.பி.எஸ். சீட் இந்த ஆண்டு வாங்கி இருக்கிறோம். எல்லா இடத்தையும் நிரம்பி விடுவோம். நல்ல முடிவு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label