OUR CLIENTS
டி.டி.வி. தினகரன் நியமன அறிவிப்பு செல்லாது: முதல்வர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்
டி.டி.வி. தினகரன் நியமன அறிவிப்பு செல்லாது: முதல்வர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம் Posted on 10-Aug-2017 டி.டி.வி. தினகரன் நியமன அறிவிப்பு செல்லாது: முதல்வர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, ஆக. 10-
அதிமுக துணைப் பொதுச்செயலாளரக தினகரனை நியமித்தது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணியையும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியையும் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

முதல்வர்  எடப்பாடி  கே பழனிசாமி இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை கூறுகையில், “அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்” என்று கூறினார். இதையடுத்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் இரு தரப்பினரிடமும் ஒருமித்த கருத்து உருவாகி இருப்பது தெரிய வந்தது. 

இன்று டெல்லி செல்லும் எடப்பாடி  கே பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நாளை (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர்  எடப்பாடி  கே பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, துரைக்கண்ணு, கருப்பண்ணன், பாலகிருஷ்ண ரெட்டி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகளாக 36 பேரை மறைந்த ஜெயலலிதா நியமனம் செய்திருந்தார். அந்த 36 பேரில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை, ராமச்சந்திரன், நீலாங்கரை முனுசாமி ஆகிய 5 பேர் ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். மீதமுள்ள 31 பேர் எடப்பாடி  கே பழனிசாமி அணியில் இருக்கிறார்கள். அந்த 31 பேரில் தம்பிதுரை, தளவாய்சுந்தரம், விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் டெல்லியில் உள்ளனர். எனவே மீதமுள்ள 27 பேரும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

10.20 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சசிகலா ஒப்புதலுடன் டி.டி.வி.தினகரன் செய்து வரும் புதிய நிர்வாகிகள் நியமனம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரன் இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி  கே பழனிசாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு சசிகலா குடும்பத்துக்கு எதிராக அவர் கொண்டு வந்துள்ள முதல் அதிரடி தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மாவால் அவரது வாழ்க்கையே அர்ப்பணித்து, வளர்க்கப்பட்டு இன்று இந்திய திருநாட்டின் 3-வது பேரியக்கமாக உருவெடுத்துள்ள அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

நாம் வணங்கும் இதய தெய்வமான புரட்சித் தலைவி அம்மா நம்மை அனைவரையும் மீளா துயரில் விட்டு விட்டு 5.12.2016 அன்று மண்ணுலகை விட்டு மறைந்ததை இன்றும் ஏற்க இயலாத மன நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் அவரது ஆன்மாசாந்தி அடைய அவரது நோக்கங்களை, லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்ற ஒன்று கூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்று கூடி அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நமது கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக கழக பணியாற்றிய அம்மாவின் இடத்தில் வேறு எவரையும் நமது கழக தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்ப மாட்டார்கள்.

அம்மாவின் மறைவிற்கு பின்னர் வி.கே.சசிகலாவை பொதுச்செயாளராக கழக சட்டதிட்டங்கள்படி புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டாலும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்படா நிலை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும் நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 20(வி)படி நமது கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக புரட்சித்தலைவி அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி புரட்சித் தலைவி அம்மாவின் வழிகாட்டுதலின்படி கழகத்தையும், ஆட்சியையும் வழி நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் புரட்சித் தலைவி அம்மாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் கழகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 30(வி)ற்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் கழகத்தின் எப்பொறுப்பையும் கழக சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.

டி.டி.வி.தினகரன் கழக துணைப் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தை 3.3.2017 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் பதில் கடிதத்தில், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தலைவி அம்மாவால் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் டி.டி.வி.தினகரன் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி அவர் கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது. மேலும் அவரை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்த பொதுச்செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.
இவைகளுக்கு மாறாக டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக கடந்த 4.8.2017 தேதியில் நமது கழகத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நமது கழகத்தை அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு புரட்சித் தலைவி அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி வழி நடத்தி வரும் நிலையில் நமது கழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த அவரால் வழங்கப்படும் அறிவிப்புகள் அ.தி.மு.க. தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கழக சட்டதிட்டவிதிகளின்படி செல்லக்கூடியவை அல்ல. கழகத் தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உயரிய லட்சியமான “ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் வாய்ப்பு”, “உழைப்பால் ஒவ்வொரு வரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்” என்பதை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று கூடி கழகத்தையும், அதன் ஆட்சியையும் வழி நடத்துவோம் என உறுதி ஏற்போம். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் 27 பேர் விவரம் வருமாறு:-
1. முதல்வர்  எடப்பாடி  கே பழனிசாமி,
2. ஆர்.வைத்திலிங்கம்
3. அ.தமிழ்மகன் உசேன்.
4. பொள்ளாச்சி வி.ஜெயராமன்.
5. பி.தங்கமணி.
7. துரை. கோவிந்தராஜன்
8. பா.வளர்மதி
9. ம.ராசு
10. ஆர்.சின்னசாமி
11. அ.அன்வர்ராஜா
12. ஆர்.பி.உதயகுமார்
13. மைதிலி திருநாவுக்கரசு
15. டாக்டர் பி.வேணுகோபால்
18. ஆர்.கமலக்கண்ணன்
19. ப.குமார்
21. வி.அலெக்சாண்டர்
22. பி.கே.வைரமுத்து
23. டாக்டர். கே.கோபால்
25. சுதா கே.பரமசிவன்
26. சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
27. கீர்த்திகா முனியசாமி
அதே சமயம், சசிகலாவால் நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மட்டும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
11.50 மணிக்கு ஆலோசனை கூட்டம் முடிந்தது. இதையடுத்து வைத்திலிங்கம் எம்.பி. தீர்மானம் விபரத்தை கூட்டத்தில் வாசித்தார். பிறகு தீர்மானம் நகல்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 12.05 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி  கே பழனிசாமி கூட்டத்தை முடித்து விட்டு வெளியில் வந்தார். 
அவரிடம் நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் அவர் பேட்டி அளிக்க மறுத்து விட்டார். தீர்மானத்தை படியுங்கள் என்று கூறியபடி சென்று விட்டார்.

Label