OUR CLIENTS
இணைப்பு முயற்சியால் ஓ.பி.எஸ். போராட்டம் ரத்து!
இணைப்பு முயற்சியால் ஓ.பி.எஸ். போராட்டம் ரத்து! Posted on 16-Aug-2017 இணைப்பு முயற்சியால் ஓ.பி.எஸ். போராட்டம் ரத்து!

சென்னை, ஆக. 16
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சியால் சென்னையில் 18-தேதி நடைபெற இருந்த ஓ.பி.எஸ்.அணி போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.  குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைக்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றும், சென்னையில் வருகிற 18-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அணி அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் வருகிற 19-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதால் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச்சேர்ந்த மா.பாண் டியராஜன் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே புதுக்கோட்டையில் வருகிற 19-ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டையில் கூட்டம் நடைபெற இருந்த டி.வி.எஸ். கார்னர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் நகரசபை தலைவரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான ராஜசேகர் அறிவித்துள்ளார்.

ஆனால் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சிக்காகவே இந்த ஆர்ப்பாட்டமும், ஆலோசனை கூட்டமும் ஒத்திவைக்கப்படுவதாக தெரியவருகிறது.  இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதன்பிறகும் பேச்சு வார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது இணைப்பு முயற்சிக்காகவே ஆர்ப்பாட்டமும், கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Label