OUR CLIENTS
பாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை! : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்!
பாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை! : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்! Posted on 16-Aug-2017 பாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில்  லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை! : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்!

கிருஷ்ணகிரி, ஆக.16-
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா சென்ற லாரியை நிறுத்தி பாகலூர் சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகப் போக்கில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியில் இருக்கும்போதே Ôகாற்றுள்ளபோதே தூற்றிக் கொள் Õ என்ற பழமொழிக்கு ஏற்ப தங்களது வாழ்க்கையை வளமாக்கி கொள்கின்றனர். இந்நிலையில் சொகுசு வாழ்க்கையும் வாழத்தொடங்கி விடுகின்றனர். இதற்கு அடித்தளமாக விளஙகுவது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியாற்றும் சோதனைச் சாவடிகளில் பணம் புரளுவதுதான் என்று அடித்து கூறலாம். 

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் செயல்படுகின்றன. இவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் சோதனைச் சாவடியில் கடந்த 2ம் தேதி நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை வாசகர்களுக்கு தெரிவிப்பதில் காலச்சக்கரம் நாளிதழ் மட்டடற்ற மகிழ்ச்சி கொள்கிறது. ஒரு லாரி பாரம் ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனையிடப்பட்டது. அப்போது இரவு நேர பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன், கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் அந்த லாரியின்  ஓட்டுநரை மிரட்டி ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்தால் மட்டுமே லாரியை நீ இங்கிருந்து எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். உடனே அந்த லாரி ஓட்டுநர் பாபுராவ் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, எனது லாரி உரிமையாளரிடம் பேசுங்கள் என்று போன் செய்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார். அதற்கு அவர் நான் ஏன் லாரி உரிமையாளரிடம் பேச வேண்டும் என்று மறுத்துவிட்டாராம். நேம்பேட்ச் அணியாமல் இருந்ததால் அவரது பெயரை அறிந்து கொள்ள ஓட்டுநர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதற்கிடையே இரவு 1.15 மணிக்கு நிறுத்தப்பட்ட லாரி ஓட்டுநரிடம் பேரம் பேசி படியாமல் போகவே ரூ.25 ஆயிரம் கொடுத்தால் விடுவிக்கிறோம் என்று பேசியுள்ளனர். 

இதற்கும் லாரி உரிமையாளர் படியாமல் போகவே ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் வரை சென்றுள்ளார். இதற்கும் இசைவு தெரிவிக்காமல் போனதால் ஆத்திரமடைந்த அந்த மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜ் ஷீட் எழுதுகிறார் ஆனால், நேரம் 1.15 மணி என்று குறிப்பிட்டு கொடுத்துள்ளார். இதை வாங்கிக் கொண்ட லாரி ஓட்டுநர் ஓசூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவித்தார். அதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அங்கிருந்த பணியாளர்கள் லாரி ஓட்டுநரிடம் ஏனப்பா அவர்கள்தான் ரூ.15 ஆயிரம் வரை இறங்கி வந்தார்களே நீ ஏன் பணம் தரவில்லை என்று லாரி ஓட்டுநரை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஓட்டுநர் இன்ட்ரி கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் இந்த லாரிக்கு இல்லை என விளக்கினார். இதில் ஓவர் லோடு இல்லை. நான் ஏன் கையூட்டு தர வேண்டும் என்று எதிர்வாதம் செய்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அபராதம் விதித்ததாக தகவல் தெரியவந்தது. பணம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. பணம் தராததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது  வெட்டவெளிச்சமாகியுள்ளது.             

கொள்ளையடிக்கும் கூடாரமாக வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இப்படி ஓரு லாரிக்கே ரூ.25 ஆயிரம் என்றால் ஒரு  8 மணி நேரம் பணியாற்றும் மோட்டார்   வாகன ஆய்வாளர்  பல கோடிகளை வாரி குவித்து வருவது அம்பலமாகிறது. அவர்களது இல்லத்தில் வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினால் போதும் பல கோடி சொத்துக்களையும், ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்யலாம். அமைச்சர்களை காட்டிலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காட்டில்தான் கனமழை பெய்கிறது.   பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் லாரி ஓட்டுநர்கள் இதுபோன்ற அரக்க குணம் படைத்த மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.   இந்நிலையில் மறுநாள் காலை ரூ.31 ஆயிரம்  பணம்  செலுத்திய பிறகு லாரியை விடுவித்துள்ளனர்.    பணம் வசூலிப்பதற்கும் வரைமுறை உள்ளது. கேட்ட பணம் கிடைக்காததால் இவ்வளவு நேரம் கழித்து வழக்குப்பதிவு செய்துள்ளார் கொள்ளைக்கூட்டத் தலைவன்  போல்   செயல்படும்   மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன்.    இதுபோன்ற அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றுவதால் நல்ல அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. குறிப்பாக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிர்ந்து போகும் அளவுக்கு ஊழல் மலிந்து காணப்படுகிறது. சொகுசு வாழ்க்கை வாழ பலரது வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள். அனைவரும் ஒருவர் போலவே இருக்கமாட்டார்கள் என்பதை இவர்கள் உணர வேண்டும். நிலைமை விபரீதமாவதற்குள்ளாக அவர்கள் திருந்த வழிவகை தேடி கொள்ள வேண்டும் என்று லாரி ஓட்டுநர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  தவறாக ஓவர் லோடு ஏற்றிச் செல்வோரிடம் சட்டம் பேசலாம். சரியாக லோடு ஏற்றிச் செல்வோரிடம் அதே சட்டத்தை திணிக்க முற்படக்கூடாது. சமுதாயத்தில் கோடீஸ்வரன்களாக வலம் வரும் மோட்டார் வாகன ஆய்வாளர்களை அரசு கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சொல்லும் காரணம் நாங்கள் இந்த வேலைக்காக ரூ.60 லட்சம் வரை கப்பம் கட்டியுள்ளோம். அதை நாங்கள் சம்பாதிக்க வேண்டாமா என நியாயம் கேட்கின்றனர். லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். நேர்மை, நியாயம், உண்மை இல்லாத நிலை மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம்  பரவலாக காணப்படுகிறது.

முரளிதரன் சொன்ன ஒரு அதிர்ச்சி தகவல் நான்தான் அனைத்து அதிகாரிகளுக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும் மாமூல் வாங்கி   கொடுக்கிறேன். என்னை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. என்னிடம் மோதி வீணாக வருத்தப்படாதீர்கள் என்று அனைவரையும் மிரட்டி வருகிறாராம். 
போக்குவரத்து துறை அமைச்சருக்கு மாதம் ரூ.2 கோடி, போக்குவரத்து ஆணையருக்கு ரூ.1 கோடி,  ஆர்டிஓ ராமசாமிக்கு மாதம் -ரூ.50 லட்சம் என அமைச்சர் முதல் அடிமட்ட அலுவலர் வரை பட்டியல் இடுகிறார் முரளிதரன். ஒரு கனரக வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம் என்றால் 24 மணி நேரத்துக்கு எவ்வளவு வசூல் செய்வார்கள் என்று கால்குலேட்டர் வைத்து கணக்கு போட்டுத்தான் பார்க்கவேண்டும். கால்குலேட்டரே திணறிவிடும் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு போக்குவரத்து சோதனைச் சாவடியில் இவ்வளவு வசூல் என்றால். தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பிற சோதனை சாவடி மையத்தில் எவ்வளவு வசூல் என்று கணக்கு போட்டுபார்க்க தனியாக ஆடிட்டர் டீம் அமைக்க வேண்டும். இவர்கள் வசூல் செய்யும் லஞ்சம் பணத்தில்  ஒரே அரசே நடத்தலாம். 
இதே போன்று கும்மிடிபூண்டி, பூந்தமல்லி, காட்பாடி, சேர்க்காடு, அத்திபள்ளி, ஒசூர் உட்பட போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 20 சோதனைச் சாவடிகள் இயங்கி வருகின்றன.

இதை உற்றுநோக்கினால் நடிகர் கமல் சொல்வது போல் நாட்டில் ஊழல் மலிந்துள்ளது என்பது நிரூபணம் ஆகின்றது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  பொறுபேற்பாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

இன்று நலிவடைந்து வரும் லாரி தொழிலில் லாபத்தை லாரியின் உரிமையாளர் பார்க்கிறாரோ இல்லையோ இதுபோன்ற மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அட்டை ரத்தத்தை உறிஞ்சுவது போன்று உறிஞ்சிவிடுகின்றனர். இதுபோன்ற அடாவடி அராஜக அதிகாரிகள்  மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பரம்  விலகினால் போக்கு வேறுமாதிரி திசை திரும்பிவிடும். ஆதலால் சுமூகமான உறவை வளர்த்து கொண்டால் இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான உறவு நீடிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அளவில்லா அதிகாரம் படைத்தவர்கள் போன்று செயல்படுகின்றனர். இந்நிலை மாறினாலே அனைத்தும் சரியாகி விடும்.   இனி இருவருடைய உறவும் சீராகிறதா அல்லது சின்னாபின்னமாகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும். 

காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் செயல்படும்  அரசு போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் பணியாற்றுவோர் கோடிகளில் புரளுகின்றனர். இதேபோன்று சேர்க்காடு சோதனைச் சாவடியிலும் கோடிகளில் புரளுகின்றனர். இதுகுறித்த விரிவான செய்தி உரிய ஆதாரத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் விரைவில் விரிவாக வெளிவரும். இதுபோன்ற ஊழலுக்கு காலச்சக்கரம் உரக்க குரல் கொடுக்கும். தொடரும்...!        

Label