OUR CLIENTS
அ.தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார்: கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம்
அ.தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார்: கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் Posted on 16-Aug-2017 அ.தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார்:  கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம்

சென்னை, ஆக. 16-
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கூறாதது ஏன்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் ரீதியிலான பரபரப்பு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நேற்று   அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஊழல்கள் நடப்பதால் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். எனது இந்த குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது? புதிய சுதந்திரப் போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவு உள்ளவர்கள் வாருங்கள், வெல்வோம்” என்று கூறியுள்ளார்.  

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இது தொடர்பாக கூறியதாவது:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். வேலூரில் மாநகராட்சி கமி‌ஷனர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.  இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நடிகர் கமல்ஹாசன் விதாண்டாவாதமாக பேசி வருகிறார். அவருக்கு எங்களைப் பிடிக்கவில்லை. அந்த விரக்தியில் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்.  யாரையோ திருப்திபடுத்த அவர் இப்படி பேசுகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதா? கலவரங்கள் நடக்கிறதா? இப்படி எதுவுமே இல்லாதபோது நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் கதை விடுவது போல கதை விடுகிறார். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் சுயவிளம்பரத்துக்காக அம்மா வழியில் நடைபெறும் இந்த அரசை விமர்சித்து வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. அதைப்பற்றி எதையும் கூற முடியாது என்பதால் ஊழல் என்று பொத்தாம் பொதுவாக பேசுகிறார்.  ஊழலை கண்காணிக்க அரசு துறைகள் உள்ளன. அவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கமல்ஹாசன் போன்றவர்கள் குழப்பம் விளைவிக்காமல் இருந்தாலே நல்லது. 
இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் கமல்ஹாசன் செல்லாக் காசாகி விடுவார். இதற்கு ஏற்கனவே உதாரணமாக இருப்பவர் விஜயகாந்த். அவர் இந்த ஆட்சியைப் பற்றி சொல்லாததையா இவர் சொல்கிறார்? விஜயகாந்தின் இன்றைய நிலை என்ன.  விஜயகாந்த் உண்மைக்கு மாறாக இந்த அரசை குறை கூறி வந்ததால் மக்கள் அவரை கண்டு கொள்ளாமல் ஒதுக்கி விட்டனர். எனவே கமல்ஹாசனும் விஜயகாந்த் போல் செல்லாக்காசாகி விடுவார்.  கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டால் வர வேண்டியதுதானே. அரசை குறை கூறித்தான் வரவேண்டும் என்பது இல்லை. இந்த அரசின் மீது வெளிப்படையாக குற்றம் சொல்ல முடியாததால் தொடர்ந்து ஊழல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  அவர் 1000 அழுக்குகளை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை அழுக்கு என்பதா? தனி மனித ஒழுக்கம் அவரிடம் உள்ளதா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறியதாவது:  இதுவரை நடிகர் கமல் ஹாசன் வாய் திறந்தது இல்லை. தற்போது தான் வாய் திறந்து பேசுகிறார். இதற்கு பின்னால் தி.மு.க.வினர் இருந்து கொண்டு தூண்டி விடுகிறார்கள். அதனால் தான் அவர் இப்படி பேசுகிறார்.  இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்களின் கூட்டத்தில் இருந்து கொண்டு அவர் இந்த மாதிரி பேசுகிறார். கமல்ஹாசன் இது மாதிரி பேசுவது அழகல்ல.  இவ்வாறு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.  நடிகர் கமல்ஹாசன் தனது சுய விளம்பரத்திற்காக அர்த்த மற்ற கருத்துக்களை கூறி காமெடி நடிகராக மாறிவிட்டார். அரசியல் சாசன சட்டம் என்ன என்பதே அவருக்கு தெரியாது. சுய விளம்பரத்திற்காக அவர் வாய்க்கு வந்தபடி எல்லாம் கருத்துக்களை கூறி வருகிறார்.   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கூறாதது ஏன்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகளுக்கு அரசியல் தெரியும், ஆனால் கமல் ஹாசனுக்கு அரசியல் தெரியாததால் அர்த்தமற்ற கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:  தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து அவர் கேள்வி கேட்க வேண்டும். சாதாரணமாக ஒரு உடல் உழைப்பு தொழிலாளி மாதம் முழுவதும் வேலை பார்த்தாலும் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்க முடிய வில்லை. ஆனால் நடிகர்கள் ஒரு படத்திற்கு ரூ.25 கோடி, ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறார்கள்.  அந்த பணத்திற்கு அவர்கள் சரியான வரி கட்டுகிறார்களா? கமல்ஹாசனின் மகள்களும் சினிமாவில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இவை அனைத்திற்கும் முறையாக வரி கட்டுகிறார்களா? என்பதை விளக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் கூறியதாவது:  தமிழ்பண்பாட்டை சீரழித்தவர் நடிகர் கமல் ஹாசன். தற்போது ஊழல் பற்றி பேசி வருகிறார். ஊழல் பற்றி பேச கமல்ஹாசனுக்கு தகுதி இல்லை. கமல்ஹாசன் எப்போதாவது திரைப்படம் டிக்கெட் விலையேற்றம் பற்றி பேசியது உண்டா?  தமிழ் கலாச்சாரத்தை கெடுப்பதில் முதன்மையானவர். அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால் சொந்த குடும்பத்தை பார்க்காத இவர் நாட்டை எப்படி காப்பாற்ற போகிறார்?. இவ்வாறு அவர் கூறினார்.

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியதாவது:  தமிழ்நாட்டில் தற்போது சிறப்பான ஆட்சி நடக்கிறது. அம்மா ஆட்சி செய்த போது கூட எம்.எல்.ஏ.க்கள் அவரை உடனடியாக பார்க்க முடியாது. ஆனால் தற்போது முதல்வரை எம்.எல். ஏ.க்கள் உடனடியாக சந்திக்க முடிகிறது.  நடிகர் கமல்ஹாசன் விளம்பரம் தேடுவதற்காக முதல்வரை குற்றம் சாட்டி பேசுகிறார். முதலில் அவர் நடிக்க தொடங்கியதில் இருந்து இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்துக்கு சரியான வரிப் பணத்தை கட்டி விட்டார் என்பதை நிரூபிப்பாரா? அதை அவர் சத்தியம் செய்து சொல்வாரா?  இவ்வாறு அவர் கூறினார்.

கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக் குட்டி கூறியதாவது:  தமிழக அரசியலை பற்றி பேசும் கமல்ஹாசன் தன்னுடைய குடும்பம் ஒழுங்காக இருக்கிறதா? என்று முதலில் பார்க்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தை வழிநடத்த முடியாத கமல் ஹாசனுக்கு தமிழக அரசியலை பற்றி பேச என்ன அருகதை உள்ளது? கமல்ஹாசன் தாராளமாக அரசியலுக்கு வரலாம். யாரு வேண்டானு சொன்னா? மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து பேச வேண்டும். கமலின் பேச்சு கண்டிக்கத்தக்கது.  இவ்வாறு அவர் கூறினார்.

அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி எதிர்ப்பு தெரிவித்து கூறியதாவது:  அ.தி.மு.க அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறுவ தற்கு கமல்ஹாசன் தகுதியற்றவராக உள்ளார். அனைத்து எம்.எல்.ஏ.க் களும் சேர்ந்து கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடர எடப்பாடியாரை வலியுறுத்த உள்ளோம்.  கமல்ஹாசன் சொந்தமாக தனி கட்சி தொடங்கி அரசியலுக்கு வரட்டும் அல்லது வேறு ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துக் கொண்டு விமர்சிக்கட்டும்.  எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மற்றவர்களின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு பேசுவது கோழை தனமாகும். இது ஆண்மைக்கு அழகல்ல. விரைவில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label