OUR CLIENTS
ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!
ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை! Posted on 18-Aug-2017 ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!

சென்னை, ஆக.18
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.  அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினார்கள். இதையடுத்து அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.  இந்நிலையில் ஆளும் அ.தி.மு.க. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தது. அந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் தொடங்கியபோது “அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்று இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்தார்.

முதலில் இந்த இரு நிபந்தனைகளையும் ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தயங்கினார்கள். ஆனால் சசிகலா, தினகரன் தரப்பினருடன் மோதல் ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சசிகலா தரப்பை ஓரம் கட்டி விட்டு, ஓ.பி.எஸ். அணியை இணைத்து அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவர் முடிவு செய்துள்ளார்.  ஓ.பி.எஸ். அணியை திருப்திப்படுத்த சமரச பாதைக்கு அழைத்து வர முதல் கட்ட அதிரடி நடவடிக்கையாக அ.தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் செயல்படுவதை ஏற்க இயலாது என்றும், அவருக்கு அ.தி.மு.க.வினர் யாரும் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் அறிவித்தார். இது ஓ.பி.எஸ். அணியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “எங்கள் கோரிக்கையில் பாதி கிணறு தாண்டி இருக்கிறார்கள். மற்றொரு கோரிக்கையும் நிறைவேற்றப்பட்ட பிறகு பார்க்கலாம்” என்றார். இந்நிலையில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் ஓ.பி.எஸ். அணியினரின் இரு முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.  அப்போது அதிகார பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.  ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அவசர அழைப்பை ஏற்று நிர்வாகிகள் இன்று சென்னை வந்தனர். ஓ.பி.எஸ். தலைமையில் மாலையில் நடக்கும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை, பி.எச்.பாண்டியன், மைத்ரேயன், ம.பா.பாண்டியராஜன், நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன், ராஜகண்ணப்பன், கே.சி.பழனிசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெறுகிறார்கள்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 2 அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை, போயஸ் கார்டன் நினைவிடமாக்குதல் போன்ற நடவடிக்கையின் மூலம் இணைப்புக்கான சாதகமான சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிபந்தனைகள் ஏற்கப்பட்டு இருப்பதால் இணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

இரு அணிகளும் இணைவதற்கு வைக்கப்பட்ட பிரதான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் இணைப்பிற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

கட்சியிலும், ஆட்சியிலும் என்னென்ன பொறுப்புகளை கேட்டு பெறுவது, ஏற்கனவே வகித்து வந்த பதவிகளை மீண்டும் கேட்டு பெறவும், கட்சியில் முக்கிய பொறுப்புகளை தங்களது ஆதரவாளர்களுக்கு கேட்கவும் அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

முதல்வர், துணை முதல்வர், பொதுச்செயலாளர், அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளை ஒதுக்குவதற்கும் ஆட்சியை வழி நடத்துவதற்கும் வழி காட்டுதல் குழு ஒன்றை அமைக்கவும். அதில் முக்கிய நிர்வாகிகளை இடம்பெறச் செய்வது குறித்தும் கருத்து கேட்கப்படுகிறது.

நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்ட பிறகு ஓ.பன்னீர் செல்வம் இரு அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிந்தவர்கள் மீண்டும் சேருவார்கள் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Label