OUR CLIENTS
போயஸ் கார்டன் நினைவு இல்லம் பிரச்சனை - ஜெ., அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர முடிவு...!
போயஸ் கார்டன் நினைவு இல்லம் பிரச்சனை - ஜெ., அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர முடிவு...! Posted on 19-Aug-2017 போயஸ் கார்டன்  நினைவு இல்லம் பிரச்சனை - ஜெ., அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர முடிவு...!

சென்னை, ஆக. 19-
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு அவரது அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  வாரிசு என்ற முறையில் எங்களது கருத்தை கேட்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்கும் முடிவுவை அறிவித்துள்ளார். நாங்கள் உயிருடன் தானே இருக்கிறோம். ஏன் எங்களிடம் கேட்கவில்லை என்று தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர தீபா முடிவு செய்துள்ளார். போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்கும் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை விடுக்க உள்ளார்.  இதுதொடர்பாக தனது வக்கீல்களுடன் தீபா ஆலோசனை நடத்தி வருகிறார். 

இது தொடர்பாக அவரது அணியின் வக்கீல் பசும் பொன்பாண்டியன் கூறியதாவது:  ஜெயலலிதாவின் தாய் சந்தியா எழுதி வைத்த உயிலின்படி போயஸ் கார்டன் இல்லத்திற்கு தீபாவும், தீபக்குமே வாரிசுகள். எனவே போயஸ் கார்டன் இல்லத்தை அவர்களே உரிமை கொண்டாட முடியும். ஆனால் தமிழக அரசு அவர்களின் கருத்தை கேட்காமல் நினைவு இல்லமாக்கும் முடிவை அறிவித்துள்ளனர். இதற்கு தடை கேட்டு தீபா சார்பில் வழக்கு தொடர உள்ளேன்.

ஜெயலலிதாவின் தாய் சந்தியா 5 கிரவுண்ட் இடத்தை வாங்கி அதில் வீட்டை கட்டினார். சொத்து குவிப்பு வழக்கில் அந்த 5 கிரவுண்ட் இடம் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே போயஸ் கார்டன் இல்ல விவகாரத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தீபா வெற்றி பெறுவார்.  இவ்வாறு வக்கீல் பசும் பொன்பாண்டியன் கூறினார்.

Label