OUR CLIENTS
திறமை, அனுபவம் இல்லாதவரிடம் கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா?
திறமை, அனுபவம் இல்லாதவரிடம் கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா? Posted on 19-Aug-2017 திறமை, அனுபவம் இல்லாதவரிடம் கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா?

சென்னை, ஆக. 19-
திறமையும், அனுபவமும் இல்லாத சுகன்யா என்பவரை கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக  நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை செயல்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) அனுபவமும், திறமையும் இல்லாத இளம்பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவில் செல்வாக்கு மிக்கவரின் மகள் என்ற ஒரே தகுதியைக் கொண்டு, எவ்வித முன் அனுபவமும் இல்லாதவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

கோவையில் ரூ.1500 கோடியில் ஸ்மார்ட் நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, கம்பெனி செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி நடத்தப்பட்ட நேர்காணலில் சுகன்யா என்பவர் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.  28 வயதான சுகன்யா தனியார் கல்லூரிகளில் பொறியியல் பட்டமும்(பி.இ), வணிக நிர்வாகவியலில் (எம்.பி.ஏ) முதுநிலைப்பட்டமும் பெற்றிருக்கிறார். இதைத் தவிர வேறு பணி அனுபவமோ, நிரூபிக்கப்பட்ட செயல்திறனோ அவருக்கு இல்லை. அவரை விட தகுதியானவர்கள் பலர் இருந்தாலும் இந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராஜுவின் மகள் என்பது தான்.

கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்போர் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; அதில் 5 ஆண்டுகள் நகர்ப்புறத்துறையில் பணி செய்திருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாத ஊதியம் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தகுதிகள் சுகன்யாவுக்கு இல்லை என்பதால், தகுதியுடையோர் எவரும் கிடைக்கவில்லை என்று கூறி அந்த ஆள்தேர்வு அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில் சுகன்யாவுக்கு பொருந்தும் வகையில் கல்வித்தகுதியாக பொறியியல் பட்டம், வணிக நிர்வாகவியல் முதுநிலைப்பட்டமும், 3 ஆண்டுகள் அனுபவமும் நிர்ணயிக்கப்பட்டன. தொடர்ந்து விண்ணப்பித்திருந்த 21 பேரிடமும் பெயரளவில் நேர்காணல் நடத்தி சுகன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத அரசு, சுகன்யாவை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனைத்து விதிகளையும் திருத்தினர். சுகன்யாவுக்கு வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே பணி அனுபவம் இருந்தது. அதுவும் வெறும் ரூ.15 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் தான் உதவி மேலாளராக பணியாற்றியுள்ளார். இப்படிப்பட்டவரை ரூ.1500 கோடி ஸ்மார்ட் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தேர்வு செய்திருக்கிறது தமிழக அரசு.

தகுதியானவர்கள் இல்லாவிட்டால், புதிதாகத் தான் நேர்காணல் நடத்த வேண்டுமே தவிர, இருப்பவரில் ஒருவரை தேர்வு செய்ய முடியாது. சென்னை ஸ்மார்ட் நகர நிறுவனத்துக்கு தலைமை நிதி அதிகாரியை தேர்வு செய்ய நடத்தப்பட்ட நேர்காணலில் தகுதியானவர்கள் யாரும் இல்லாததால் அப்பதவி காலியாக வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அரைகுறையானோரை கொண்டு நிரப்பட்டவில்லை.

எனவே, கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுகன்யா நியமிக்கப்பட்டதை அரசு ரத்து செய்ய வேண்டும். மீதமுள்ள ஸ்மார்ட் நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள் நேர்காணலை சமூக ஆர்வலர்களை, பார்வையாளராக நியமித்து வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Label