OUR CLIENTS
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்!
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்! Posted on 22-Aug-2017 தொடர்ந்து புறக்கணிக்கப்படும்  தமிழ் ஆசிரியர்கள்!

கோயம்புத்தூர், ஆக.22- 
கோயம்புத்தூர் அடுத்த வால்பாறை ஒன்றியத்தில் 82 அரசு பள்ளிகள் உள்ளன. அதில் 250 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 அதில் 6 ஆசிரியர்கள் மொழி சிறுபான்மை (மலையாளம்) பணி நியமனம் பெற்று பணியாற்றி வருகின்றனர். பெரும்பான்மை மொழி பேசும் தமிழ் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என்பது அரசின் விதி. 

ஆனால் மொழி சிறுபான்மை ஆசிரியர்கள் அனைவருக்கு தமிழ் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதவி உயர்வை நிறுத்தி வைக்கக்கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர் ஆசிரியர்கள். உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளனர். ஆனால் உயர் அதிகாரிகள் கோரிக்கை மனுவை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த மொழி சிறுபான்மை ஆசிரியர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சி வரை அவர்களது தாய்மொழியான மலையாளத்திலேயே கல்வி பயின்றவர்கள் ஆவர். வால்பாறையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வால்பாறை ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் லோயர் சேக்கல் முடி ஆகிய இரண்டு பள்ளிகள் மட்டுமே மலையாள வழிகல்வி. அங்கு மட்டுமே மலையாள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்க முடியும். 

ஆனால் அங்கேயும் அவர்களுக்கு தலைமை ஆசிரியர் பணி வழங்கிவிட்டு மேலும் தமிழ் வழி கல்வி பள்ளிகளிலும் அவர்களுக்கே ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழி பள்ளிகளில் நாற்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். ஆனால் இரண்டே இரண்டு மலையாள வழி பள்ளிகளில் இருபது மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். 

அதுவும் நடுநிலைப் பள்ளிகள். இந்நிலையில் கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ¬னைத்து ஆசிரியர்களும் சென்னைக்கு சென்றிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலையாள கல்வி ஆசிரியர்கள் ஆறு பேருக்கு தமிழ் வழி கல்வி பள்ளிகளில் போஸ்டிங் போட்டுவிட்டனர். வால்பாறைக்கு திரும்பிய பின்னரே பள்ளிக்குச் சென்றபோது தான் அவர்களுக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. 

வால்பாறையில் தமிழ் மற்றும் மலையாள வழி பள்ளிகள் இருப்பதுபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி வழி பள்ளிகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழி  வழி பள்ளிகள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழி வழி பள்ளிகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் எல்லாம் அந்தந்த மொழி வழி பள்ளிகளில் மட்டுமே அவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 தமிழ் வழி பள்ளியிலேயோ அலுலது இரு மொழி வழி பள்ளிகளிலேயோ அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், கோவை மாவட்டத்தில் மட்டும்தான், அரசாணையை மதிக்காமல் கல்வித்துறை அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்.  மொழி சிறுபான்மை ஆசிரியர்கள்  கூட்டமைப்பின் தலைவராக ஓசூரைச் சேர்ந்த அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளார். அவரின் சிபாரிசின் பெயரில்தான் இவை அனைத்தும் நடக்கிறது.

 வால்பாறை மட்டுமல்லாமல் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் இதேபோல் நடந்து வருகிறது. அரசும், அதிகாரிகளும் இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும். நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ் பள்ளியில் மலையாள ஆசிரியர்களை பணி நியமனம் செய்ததை அடுத்து தமிழ் ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கின் தீர்ப்பில், தமிழ் பள்ளிகளில் மாற்று மொழி ஆசிரியர்கள் நியமனத்தை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர்களின் நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
வால்பாறை பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள மலையாள ஆசிரியர்களின் பணி நியமனத்தை திரும்ப பெறாவிட்டால் நாங்களும் நீதிமன்றம் செல்வோம் என்று  தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பள்ளிக் கல்வித் துறையில்   அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் அமைச்சர் செங்கோட்டையன். 

இப்பிரச்னைக்கும் ஒரு நிரந்தர  தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் செங்கோட்டையன் தற்போது நடந்து வரும் நீட் தொடர்பான பிரச்னையே இன்று வரை தீராமல் உள்ளது.  இந்த வழக்கு விசாரணை இன்று (22ம் தேதி) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

 இப்படி நிலைமை இருப்பதால் கல்வித்துறையில் பல குளறுபடிகளில் இதுஒருபுறம்  நடந்து வரும் குளறுபடிகள்  என்று கூறலாம். ஆக மொத்தம் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படுவது எப்போது என்பது மட்டும்தான் இன்றைய கேள்வியாக உள்ளது. இதற்கு எப்போது விடை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label