OUR CLIENTS
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் திருமண உதவித்திட்ட தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் திருமண உதவித்திட்ட தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா? Posted on 23-Aug-2017 தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் திருமண உதவித்திட்ட தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

திண்டிவனம், ஆக.23- 
 ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட திருமணத்திற்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, திட்ட உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் ஏழை பெற்றோரின் பெண்கள், விதவைத் தாயின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்யும் விதவையர் ஆகியோருக்கு உதவும் வகையில், திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம், திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கப் படுகிறது.
இதே போல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை படித்துள்ள ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெ.,வின் நன்மதிப்பை பெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தடையில்லாமல் பயனாளிகளுக்கு பணம் மற்றும் தமிழக அரசின் கோபுரம் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க காயின் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், ஜெ.,மறைவிற்கு பிறகு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் தமிழகம் முழுவதும் விண்ணப்பித்த பயனாளிகளுக்குறிய தொகை வழங்கப்படாமல் உள்ளதாக, ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. 

கடந்த 2016-17ம் ஆண்டில் விண்ணப்பித்த பயனாளிகளுக்கே இதுவரை திட்டத்தின் பலன்கள் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.  குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள 22 ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணம் மற்றும் தங்க காயின் வழங்கப்படவில்லை.

வழக்கமாக இந்த திட்டத்தில், திருமணம் நடப்பதற்கு 45 நாட்களுக்கு முன், திருமண பத்திரிக்கையை விண்ணப்பத்துடன் இணைத்து, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, திருமண உதவி தொகை மற்றும் தங்கம் வழங்கப்படும்.

தற்போது கடந்த ஜனவரியிலிருந்தே இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விண்ணப்பம் செய்த பலர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் வெளியில் கடன் வாங்கி, திருமணத்தை நடத்தி விட்டு, அரசின் உதவித்தொகை எப்போது வரும் என்று காத்திருக்கும் நிலைமை உள்ளது. பலர் அரசின் உதவி கிடைக்காமல் போனதால், திருமணத்தை தள்ளி போடும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது.

இதுபற்றி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ‘’ ஜெ.,இருந்த போது, இந்த திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஜெ.,மறைவிற்கு பிறகு, இந்த திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. 

இதனால் விண்ணப்பதாரர்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. அனைத்து இடங்களில் இருந்தும் பிரச்னை வருவதால், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,”” என்று தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத் தில் கடந்த ஜனவரியிலிருந்து இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனா ளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
ஏழைக்குடும்பத் திற்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள திருமண உதவித்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, போதுமான நிதியை ஒதுக்கி, விரைவில் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label