OUR CLIENTS
ஆற்காடு அருகே பாலாற்றில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு
ஆற்காடு அருகே பாலாற்றில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு Posted on 23-Aug-2017 ஆற்காடு அருகே பாலாற்றில்  விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு

வேலூர், ஆக.23- 
ஆற்காடு அருகே பாலாற்றில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பதால் அதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக இருப்பதுடன் விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீரை பாலாறு வழங்கி வருகிறது.

 முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் பாலாற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது பாலாற்றில் தண்ணீர் ஓடுவது அதிசயமாக கருதும் நிலை உள்ளது.

அந்தளவிற்கு பாலாறு வறண்டு காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகிறது. 

கர்நாடக மாநிலத்தில் 93 கி.மீ. ஆந்திராவில் 33 கி.மீ. உள்ள பாலாறு தமிழகத்தில் 232 கி.மீ. தொலைவிற்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.  இந்த பாலாற்றில் தண்ணீர் வரும் போது சென்னைக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள வயலார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. 

வேட்டமங்கலம் ஏரி நிரம்பி வழியும் போதுதான் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த வெள்ளத்தால் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, வாலாஜா, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பாலாற்றின் கரையோரம் உள்ள முக்கிய நகரங்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பெரும் ஆதாரமாக பாலாறு விளங்குகிறது.

ஆனால், இந்த பாலாற்றில் தற்போது தேவையில்லாத குப்பைகளை கொட்டும் பகுதியாகவும், தோல் கழிவுநீர் வெளியேற்றப்படும் பகுதியாகவும் மாறி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அவலநிலையில் உள்ளது.

பாலாற்றின் கரையோரம் பல பகுதிகள் புதர் மண்டி கிடக்கிறது. மேலும், தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையால் பல பகுதிகளில் பாலாறு மணல் இல்லாமல் வறண்டு மண் தரையாக காட்சியளிக்கிறது.

பல்வேறு இடங்களில் பாலாற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. 

ஆந்திர அரசு 33 கி.மீ. உள்ள பாலாற்றில் 22 இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளது. ஆனால் 232 கி.மீ. தூரம் ஓடும் பாலாற்றில் கட்டப்பட்ட புதுப்பாடி அணையைத் தவிர வேறு எந்த இடங்களிலும் தடுப்பணை கட்டாதது வேதனையாக உள்ளது. 

மேலும் பாலாற்றின் கரையோரங்களில் பல்வேறு இடங்களில் தனியார் போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சும் அவலநிலையும் உள்ளது.

எனவே ஏற்கனவே பாழடைந்து போன பாலாற்றை மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி பாலாற்றின் கரையோரங்களில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.  

ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலாற்றை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label