OUR CLIENTS
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்! Posted on 23-Aug-2017 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்!

தூத்துக்குடி, ஆக.23- 
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் எனும் தாமிர ஆலை மராட்டிய மாநிலத்தில் இருந்து அந்த மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தொடர்ந்து குஜராத், கோவா, கேரளா என எந்த மாநிலத்திலும் காலூன்ற முடியாமல் கடந்த 1994ல் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் புண்ணியத்தில் தமிழகத்தில் தென்மாவட்டமான தூத்துக்குடியில் காலூன்றியது.

 அதற்கு முன்பே 1993 லே ஆரம்ப கட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு போராடினர்.

ஆனாலும் 1994ல் ஆலை செயல்படத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகள் மாறி மாறி வந்துவிட்டன. ஸ்டெர்லைட்டின் முன்பக்க கதவை கூட இதுவரை மூட முடியவில்லை என்பதுதான் தூத்துக்குடி மக்களுக்கு வேதனையான விஷயம்.

இந்த ஆலைக்கு எதிராக கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மீனவ மக்களும் அவர்களுக்கு துணையாக அரசியல் கட்சிகளும் போராடித்தான் பார்க்கின்றனர். 

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோபால்சாமி ஸ்டெர்லைட் ஆலையை தீவிரமாக எதிர்த்தவர். ஆலை மீது வழக்கு தொடர்ந்து தானே நீதிமன்றத்தில் வாதாடினார்.

ஆனால் போராட்ட குரல் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. காரணம் போராட்டகாரர்களை விட ஆலையிடம் விலை போனவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது என்பதுதான். 

சமீபத்தில் இந்த ஆலை நிர்வாகம் இன்னுமொரு புதிய ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. அதை எதிர்த்துதான் கடந்த பதினெட்டாம் தேதி தூத்துக்குடியில் பிரமாண்ட மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்தினர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர்.

கடந்த ஆண்டுகளில் இந்த ஆலையில் பல மோசமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த தாமிர ஆலை இதுவரை ஆலையின் கொலைப் பசிக்கு பல நூறு பேரை பலிவாங்கி விட்டது.

ஆனால் ஆலை நிர்வாகம் அத்தனை உயிர்களுக்கும் ஒருவிலை வைத்து அரசியல்வாதிகள் மூலம் கட்டப்பஞ்சாயத்து நடத்தி அனைவரையும் வாயடைத்து விடுகின்றனர். 

கடந்த 2103, மார்ச் முதல் இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கந்தககடை&ஆக்சைடு நச்சு வாயுவினால் அதிகாலை நேரத்தில் தூத்துக்குடி மக்கள் மூச்சு திணறல், நெஞ்செரிச்சல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற பல்வேறு பாதிப்புக்குள்ளானார்கள்.

செடி, கொடி, தாவரங்கள் கருகின. தாவரங்கள் போல கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் கொஞ்சம் விழித்த அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால் வேதாந்த குழுமத்தின் கரன்சிகள் மத்திய, மாநில அரசுகளை துளைத்து வெளியே வந்து விட்டது.

 வழக்கம்போல் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் மின்சாரம் கிடைத்து, அதை கொடுத்து வந்ததால் ஆலை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தற்போது இரண்டாவது ஆலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

அதை எதிர்த்துதான் கடந்த மாதம் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். அதிலும்கூட குறிப்பாக மீனவ மக்கள்தான் அதிகம் கலந்து கொண்டனர். இந்த ஆலை நிர்வாகம் தூத்துக்குடியில் ஒரு சாதி பிரிவையே உருவாக்கி விட்டது என்பதுதான் உண்மை.

அதனால்தான் தனது இரண்டாவது ஆலை விரிவாக்கத்துக்காக மத்திய, மாநில அரசு துறைகளுக்கு புணரமைப்பு என்ற வகையிலும் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சில திட்டங்கள் நிறைவேற்ற எனவும் பலநூறு கோடிகளை ஒதுக்கியுள்ளதாம். 

ஏற்கனவே நச்சுவாயு வெளியேற்றத்தால் மூடச்சொன்ன ஆலையை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் நூறு கோடி வைப்பு நிதியாக வைத்துதான் செயல்படுகிறது.

ஆனால் அரசாங்கத்தை ஏமாற்றியதில் சுங்கவரி மட்டும் 738 கோடி. அதேபோல் தாமிரத்தை ஏற்றுதி பண்ணாமலே ஏற்றுமதி பண்ணியதாக கணக்கு காட்டி அரசிடம் பெற்ற மானிய தொகைமட்டும் ரூ.780 கோடி என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

ஒரு பக்கம் மத்திய, மாநில அரசு துறை, மக்கள் என அவர்களுக்கு பல கோடி ஒதுக்கியதாகச் சொல்லி ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தையே ஏமாற்றி பல ஆயிரம் கோடி வசூலித்து விடுகிறது இந்த ஸ்டெர்லைட் நிர்வாகம்.

தூத்துக்குடி மக்களின் உயிருக்கான விலையை ஸ்டெர்லைட் ஆலை மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து வருவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பிறகு எப்படி ஆலையை மூடுவார்கள் என்பது சாதாரண குடிமகனின் கேள்வியாக உள்ளது.

 கிட்டத்தட்ட தமிழகம் முழுக்க விவசாயம் அழிந்து வரும் நிலையில் இந்த ஆலை தாமிரபரணியில் இருந்து ஏற்கனவே ஒரு கோடி லிட்டருக்கும் மேல் தண்ணீர் எடுக்கும் நிலை வரும்.

அப்படி வந்தால் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தாமிரபரணியை நம்பியுள்ள மக்கள் தண்ணீருக்காக அலையும் அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 அப்போது தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல மாவட்டத்தின் பல்வேறு கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலையை உணர்ந்து அரசு ஸ்டெர்லைட்டின் விரிவாக்க பணியை தடை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

க்ஷ தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மீனவ  மக்களும், சமூக ஆர்வலர்களும் பேராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்களுக்கென்று தனி மின்நிலையமும் அமைத்து இன்னுமொரு ஆலை விரிவாக்க பணிகளையும் தொடங்க உள்ளனர்.ஆனால் ஆட்சியாளர்கள் மட்டும் தமிழகத்தில் மாறி மாறி வந்தும் இந்த பிரச்னைக்கு முடிவு ஏற்படுவதாக தெரியவில்லை.

 காரணம் சுயநல அரசியல் மற்றும் அரசுகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டங்களுக்கு தீர்வே கிடையாது என்பதுதான் வேதனையான உண்மை.
ஆனால் போராட்டங்கள் கிளர்ச்சியாக மாறினால் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label