OUR CLIENTS
செயல்படாத மாவட்டச் செயலாளர்களை கணக்கெடுக்கும் கேப்டன் விஜயகாந்த்!
செயல்படாத மாவட்டச் செயலாளர்களை கணக்கெடுக்கும் கேப்டன் விஜயகாந்த்! Posted on 23-Aug-2017 செயல்படாத மாவட்டச் செயலாளர்களை கணக்கெடுக்கும் கேப்டன் விஜயகாந்த்!

வேலூர், ஆக.23- 
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிமுக, திமுகவுக்கு அடுத்த கட்சி என்ற நிலைக்கு விஸ்வரூபம் கண்ட விஜயகாந்தின் தேமுதிகவின் இன்றைய நிலவரம் கலவரமாகவே உள்ளது. 

ஒரு லெட்டர் பேடு கட்சிகளில் இருக்கும் செயல்பாடுகள் கூட இல்லாமல் காட்சியளிக்கிறது. கட்சி தொடங்கிய புதிதில் விஜயகாந்த் பேசிய ஒவ்வொரு பேச்சும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

இதனால் தனித்தே தேர்தல்களை சந்தித்து தனது வாக்கு வங்கியை தனியாக நிரூபித்தார் கேப்டன் விஜயகாந்த் என்பது உண்மை. 

அதன்பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 34 எம்எல்ஏக்களோடு எதிர்கட்சி தலைவரும் ஆனார். அப்படி படிப்படியாக உச்சிக்கு சென்ற விஜயகாந்த் வைகோவுடனான தொடர்பால் மக்கள் நலக்கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படுதோல்வி அடைந்தார். 

அந்தத் தோல்வியால் துவண்டு போனவர். அதோடு பேசுவதெல்லாம் உளறல் என்றாகிவிட்டதோடு, மக்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை இழந்து விட்டார்.

இப்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் யாரும் கட்சி அலுவலகம் பக்கமோ, நேரில் தன்னுடன் பேசவோ வரவில்லை என்பதால் இப்போதுள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மாற்றிவிட்டு பழைபடி தான் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களை மீண்டும் பதவிக்கு கொண்டு வரும் திட்டத்தில் உள்ளாராம். 

இதுகுறித்து கட்சியின் ஆரம்ப கால நிர்வாகிகள் சிலர் கூறுகையில், தேமுதிக என்பது விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவரை அதிமுக, திமுகவுக்கு மாற்றாகத்தான் இருந்தது. எப்போது அவரது மனைவி, மைத்துனர் கட்சிக்குள் நுழைந்தார்களோ அப்போதே அழிவை தேடிக்கொண்டது. 

கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு பணம் கொடுப்பவர்களுக்கு எல்லாம் பதவியை கொடுத்தார்கள். அதுவும் சாதியைப் பார்த்து, இப்போது எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் எங்களை அழைக்கின்றனர். என்ன செய்வது என்று தெரியவில்லை என்றனர். 

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல கட்சி காணாமல் போன பிறகு விசுவாசிகளை தேடுகிறார் கேப்டன் விஜயகாந்த். அவரது இந்த புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வுக்கு பிறகாவது கட்சி தேறினால் நல்லதுதான். அதுவும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் கேப்டன். எது எப்படியோ இனி கேப்டனின் செயல்பாட்டில் மாற்றம் இருந்தால் சரி.

Label