OUR CLIENTS
4 கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து மனு: எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வற்புறுத்தல்!
4 கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து மனு: எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வற்புறுத்தல்! Posted on 30-Aug-2017 4 கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து மனு: எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வற்புறுத்தல்!

சென்னை, ஆக.30-
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வலியுறுத்தி கவர்னர் வித்யாசாகர் ராவை 4 கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

அ.தி.மு.க.வில் ஆட்சியையும், கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் மொத்த எம்.எல்.ஏ.க்களான 134 பேரில் 113 பேர் எடப்பாடி பழனிசாமியையும், டி.டி.வி. தினகரனை 21 பேரும் ஆதரிக்கிறார்கள்.  ஆட்சியை நடத்த வேண்டுமானால் 117 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு வேண்டும். எடப்பாடி பழனிசாமியை 113 எம்.எல்.ஏ.க்களே ஆதரிப்பதால் அவர் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாகவும் எனவே அவருக்கு ஆட்சியை நடத்தும் உரிமை இல்லை என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.  

இந்த விவகாரத்தில் கவர்னர் உடனடியாக தலையிட்டு “சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து காட்டுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் இதுவரை எந்த உத்தரவையும் வெளியிடவில்லை.  இதையடுத்து ஜனாதிபதியை நாளை தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகிய 5 கட்சியினர் சந்தித்து பேசி முறையிட உள்ளனர். ஜனாதிபதியும் இதில் முடிவு எடுக்காவிட்டால் அடுத்தக் கட்டமாக கோர்ட்டை நாட உள்ளனர். டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியினரும் இதே திட்டத்துடன் தான் உள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவை, மக்கள் நலக் கூட்டியக்க தலைவர்கள் சந்தித்து பேச முடிவு செய்தனர். அதன்படி இன்று பகல் 11 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகிய 4 பேரும் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தங்கள் கோரிக்கையை அவர்கள் மனுவாகவும் கவர்னரிடம் கொடுத்தனர்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான எதர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்து விட்டன. ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனத்தை கடை பிடித்து வருகிறார். அவர் உத்தரவு ஏதேனும் வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Label