OUR CLIENTS
கட்சியை கைப்பற்றி விட்டோம் & திவாகரன்.
கட்சியை கைப்பற்றி விட்டோம் & திவாகரன். Posted on 02-Sep-2017 கட்சியை கைப்பற்றி விட்டோம் & திவாகரன்.

சென்னை, செப்.2-
எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சி மட்டுமே உள்ளது. கட்சியை நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டோம் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டியளித்துள்ளார்.

சசிகலாவின் சகோதரர் வி.திவாகரன் பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நிர்வாகியாக நியமித்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி பதவி வகித்தவர்கள் சரிவர செயல்படாதது தாமதமாக தெரிய வந்தது. அதனால் பல இடங்களில் கட்சியின் அமைப்பு சீர்குலைந்துவிட்டது. 

எனவே கட்சியில் ஓரங்கட்டபட்டவர்கள், விசுவாசிகள் மற்றும் களம் இறங்கி பணியாற்றும் தொண்டர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். இதன் மூலம் உள்ளாட்சி தேர்தல்களுக்காக கட்சியை நாங்கள் நிச்சயம் மறு சீரமைப்பு செய்வோம். டி.டி.வி. தினகரன் அணியை நான் வழிநடத்தும் ஆலோசகர் என கூறுகின்றனர். அப்படி எதுவும் இல்லை. அதற்கு கட்சியில் பலர் உள்ளனர். தினகரனும் சிறந்த அரசியல் நிபுணர் தான். அவர் கட்சி நிர்வாகங்களை திறம்பட செயல்படுத்துகிறார்.

அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர் நானோ அல்லது தினகரனோ அல்ல தற்போது கட்சி கூட்டு தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஜெயலலிதா ஆகியோருடன் ஒரு தலைவரின் கீழ் இயங்கிய காலம் முடிந்து விட்டது.  இனி உயர்மட்ட குழு வழி காட்டுதலின் படி கூட்டு தலைமையின் கீழ் கட்சி இயங்கும். அந்த குழுவில் கட்சியின் அனைத்து பிரிவினரும், விசுவாசிகளும் பிரதிநிதிகளாக இருப்பார்கள். அவர்களின் ஆலோசனையின் படி கட்சியின் பொதுச்செயலாளர் செயல்படுவார்.

அ.தி.மு.க.வில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு சிறப்பான தலைவரை பெற முடியாதா? பொதுவாக ஒரு தலைவர் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகின்றனர். அரசியலில் பிறரை கவர்ந்திழுக்கின்ற ஆற்றல் மிகுந்த தலைவர் தேவையில்லை. செயல் திறன், அதிவிரைவாக முடிவெடுக்கும் திறன், ஊழல் இன்றி வழிநடத்தும் திறன் போன்றவையே முக்கிய தகுதிகளாகும்.

அரசுக்கு நாங்கள் சிறிதளவு தொல்லை தருகிறோம். ஏனெனில் அது மக்களிடமும், கட்சி தொண்டர்களிடமும் கடுங்கோபத்துக்கு ஆளாகி இருக்கிறது.  இந்த அரசு நிலைக்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சபாநாயகர் பி.தனபால் போன்ற ஒருவரை முதல்வராக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். அந்த பதவியை வேறு ஒருவர் ஏற்க வேண்டும். ஆனால் அவர் பதவி விலக மறுத்தால் அரசு கவிழும். கட்சியும் விழும். கட்சியையும், ஆட்சியையும் ஏற்ற பிறகு அவர் ஒரு கட்சி கூட்டத்தை கூட நடத்தவில்லை. கட்சி தொண்டர்கள் அவர்களது உறவினர்களுக்கு ஒரு மாற்றல் உத்தரவு கூட பெற முடியவில்லை.  

அங்கு ஒவ்வொருவரிடமும் அனைத்துக்கும் ஒரு விலை இருக்கிறது. இருந்தும் அரசை எங்களால் கைப்பற்ற முடியவில்லை கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டோம்.  

கட்சியில் இருப்பவர்கள் செயல்படவில்லை. அதனால் தான் நாங்கள் கட்சிக்குள் நுழைந்தோம். தொடக்க காலத்தில் இருந்தே அம்மாவுடன் இருந்தோம். அவருடன் சேர்ந்து பல இன்னல்களை சந்தித்தோம்.  கட்சியின் வளர்ச்சியில் நான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறேன். அம்மாவின் அரசியல் திருப்பு முனையிலும் நான் இருந்தேன். அம்மாவுடன் இருந்த போது 3 தடவை எனது வாழ்க்கையை இழந்து இருக்கிறேன். ஆனால் இன்று நான் யார் என மக்கள் கேட்கின்றனர். அதற்கு காலம் பதில் சொல்லும். கட்சியில் வெளிப்படை தன்மை, ராணுவ கட்டுப்பாடு போன்றவற்றை அம்மா கடைபிடித்து வந்தார். கட்சியை பலப்படுத்த அதையே நாங்கள் கடைபிடிக்கிறோம்.  இந்த அரசு கவிழ்ந்தால் அது தி.மு.க.வுக்கு சாதகமாகி விடும். அந்த வாய்ப்பை நாம் ஏன் வழங்க வேண்டும். அவர்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அதன் வழியில் நாங்கள் விட்டு விடுவோம்.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் நாங்கள் அடையாளம் காட்டினோம்.   அம்மா அவரை முன்னுக்கு கொண்டு வந்தார். நாங்களும் அவர் பின்னால் சென்றோம். அவரது மறைவுக்கு பிறகு அரசாங்கத்தை நல்ல முறையில் வழி நடத்துவார் என நினைத்தோம்.  ஆனால் அவர் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்தின் கீழ் சென்றவுடன் அவரது நடவடிக்கைகள் மாறின. அதே நடவடிக்கையை தான் எடப்பாடி பழனிசாமியும் மேற்கொள்கிறார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label