OUR CLIENTS
காசநோய் துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - முறைகேடாக ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.34 லட்சம் கையாடல்.
காசநோய் துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - முறைகேடாக ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.34 லட்சம் கையாடல். Posted on 06-Sep-2017 காசநோய் துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - முறைகேடாக ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.34 லட்சம் கையாடல்.

வேலூர், செப்.6-
வேலூரில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த காசநோய் துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ராஜா சிவானந்தம். இவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் பணியாற்றினார். இவர் காச நோய் ஒழிப்பு சம்பந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் களப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.  ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்து தேசிய காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினார். இதில் 19 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் எடுத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 19 ஊழியர்களையும் திடீரென பணியில் இருந்து நிறுத்தி விட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பணியில் இருப்பதாக ராஜா சிவானந்தம் போலியாக ஆவணங்களை தயாரித்து அனுப்பினார். இதன் மூலம் காசநோய்கள் தடுப்பு இயக்குனரகத்தில் இருந்து 19 ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டது.   2013 முதல் 2015 வரை 2 ஆண்டுகள் முறைகேடாக ஆவணங்கள் மற்றும் போலியாக கையெழுத்து போட்டு சம்பளம் வழங்கியுள்ளனர். அந்த கால கட்டத்தில் ராஜா சிவானந்தம் அலுவலகத்தில் பணிபுரிந்த ஸ்ரீதர், ரமேஷ் ஆகியோர் வங்கிகணக்கில் 19 ஊழியர்களின் பெயரில் சம்பள பணத்தை பெற்று கையாடியுள்ளனர்.

2 ஆண்டுகளில் மொத்தம் ரூ.34 லட்சத்து 84 ஆயிரத்து 741 பணம் கையாடல் செய்துள்ளனர். ராஜா சிவானந்தத்துக்கு உதவிய ஸ்ரீதர் என்பவர் தற்போது மாவட்ட முன்சீப் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராகவும்,  ரமேஷ் என்பவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் அலுவலக உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 ஆண்டுகள் செய்த முறைகேடு துறை ரீதியான தணிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டது.  இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. கடந்த மாதம் ராஜா சிவானந்தம், ஸ்ரீதர், ரமேஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜா சிவானந்தம் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை சஸ்பெண்டு செய்தனர். தற்போது அவரது பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்று விட்டார். இவரது பணிக்காலத்தில் 19 தற்காலிக பணியாளர்கள் பணியாற்றியதாக முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து பணம் கையாடல் செய்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் சத்துவாச்சாரி பழைய சூப்பர் மார்க்கெட் ரோட்டில் உள்ள ராஜா சிவானந்தம் வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.  அதே நேரத்தில் தொரப்பாடி போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீதர் மற்றும் சத்துவாச்சாரி பகுதி-2, 8-வது குறுக்கு தெருவில் உள்ள ரமேஷ் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.

நேற்று காலை சுமார் 7.30 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. ராஜா சிவானந்தம் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Label