OUR CLIENTS
மதுரவாயல் பறக்கும் சாலைக்கு டெண்டர் விட முடிவு!
மதுரவாயல் பறக்கும் சாலைக்கு டெண்டர் விட முடிவு! Posted on 06-Sep-2017 மதுரவாயல் பறக்கும் சாலைக்கு டெண்டர் விட முடிவு!

சென்னை, செப்.6-
சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி - இறக்கிச் செல்லும் கனரக வாகனங்களுக்காக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 19 கி.மீ. தூரத்துக்கு தூண்கள் அமைத்து உயர்மட்ட பாலத்தில் 4 வழிகளில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முதலில் அண்ணா நகர், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் கூவம் ஆற்றில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் கூவம் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு மாற்று வழியில் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தியது. இதையடுத்து திட்டத்துக்கு மத்திய - மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன.

இதையடுத்து இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையும், சென்னை துறைமுக நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகிறது. பறக்கும் சாலைக்கான திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த டெண்டர் விடப்படுகிறது. ஏற்கனவே 2 முறை டெண்டர் விடப்பட்ட நிலையில் தற்போது 3-வது டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விட ஆலோசனை நடந்து வருகிறது.

பறக்கும் சாலைக்காக மதுரவாயலில் 100-க்கும் மேற்பட்ட தூண்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. இதே போல் கூவம் ஆற்றின் நடுவிலும் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. தற்போது கூவத்தில் உள்ள தூண்கள் அகற்றப்பட்டு கூவத்தின் வடக்கு கரையில் மாற்றி அமைக்கப்பட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கப்படுகிறது.

கோயம்பேடு மேம்பாலம் அருகில் தற்போதைய சாலையுடன் இணைவதை தவிர்த்து தனி பாதையில் பறக்கும் சாலை அமையும். இங்கு கூவத்தின் வடக்கு பகுதி வழியாக மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே குறுக்காக சென்று அதன் பிறகு கூவத்தின் தெற்கு கரை வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் (எண்.4) இணையும்.

இதே போல் நேப்பியர் பாலம் அருகிலும் பறக்கும் சாலை மாற்றி அமைக்கப்படுகிறது. இங்கு கூவம் ஆற்றின் வடக்கு கடற்கரை வழியாக பொதுப்பணித்துறை சாலையில் இணைந்து துறைமுக நுழைவு வாயிலை அடையும். டெண்டர் விடும்போது மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்துக்கு ஏற்ப கட்டுமானப் பணிகள், தொழிலாளர் மற்றும் நிர்வாகச் செலவினங்கள் சேர்க்கப்படும்.

Label