OUR CLIENTS
ஆசிரியர் தின விழாவில் முதல்வர் சொன்ன குட்டிக் கதை.
ஆசிரியர் தின விழாவில் முதல்வர் சொன்ன குட்டிக் கதை. Posted on 06-Sep-2017 ஆசிரியர் தின விழாவில் முதல்வர் சொன்ன குட்டிக் கதை.

சென்னை, செப்.6-
ஆசிரியர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்களுக்காக ஒரு குட்டிக் கதையைக் கூறினார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறிய குட்டிக் கதை: ''மாற்றங்களைப் பற்றி சொல்லும்போது எனக்கு ஒரு ஜென் கதை நினைவிற்கு வருகிறது. அதில் ஒரு கதையை நான் இங்கு நினைவு கூறவிரும்புகிறேன். 

ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகள் நெடு நாட்களாக மழையிலும், காற்றிலும் கிடந்து தூசி நிறைந்து பாசி பிடித்து கிடந்தது. அதில் முதல் கல்லுக்கு, நாம் ஏன் இப்படியே ஒரு அவலட்சணம் பொருந்திய கல்லாகவே இருக்க வேண்டும்? வேறு இடம், வேறு வடிவம் கொள்ளலாமே என நினைத்து, இரண்டாம் பாறையிடம் தன் விருப்பத்தை சொன்னது.  உடனே அப்பாறை நாம் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் கல்லாகவே கிடப்போம். ஆகவே, இப்படியே இருத்தல் நலமே எனக் கூறியது. 

கொஞ்ச நாட்களில் சிற்பிகளைக் கொண்ட ஒரு குழு அந்த இடத்திற்கு வந்தது. அவர்கள் ஒவ்வொரு பாறையாய் ஆராய்ந்து இவ்விரு பாறைகளே மிகச் சிறந்தவை என்ற முடிவுக்கு வருகிறார்கள். தலைமைச் சிற்பி, சரி, நாளை நாம் இங்கு வந்து இவ்விரு பாறைகளையும் எடுத்துச் செல்வோம் என்று கூறினார். அவர்கள் போன பின் முதல் பாறை சொல்லியது ''ஆஹா! நாம் எதிர்பார்த்த மாற்றம் வரப்போகிறது. நாம் நல்ல சிலையாக, சிற்பமாக மாறப்போகிறோம்'' என்று குதூகலித்தது. ஆனால், இரண்டாம் பாறையோ, ''அவர்கள் நம்மை சுத்தியால் அடிப்பார்கள், உளியால் செதுக்குவார்கள் - வலி உயிர் போகும். எனவே நாளை அவர்கள் வரும் போது நான் பெயர்த்து எடுக்க முடியாதபடி கடினமாக மாறி பூமியோடு ஒட்டிக் கொள்வேன்'' என்றது. 

மறு நாள் சிற்பிகளின் குழு வந்தது. முதல் பாறையை மட்டுமே அவர்களால் சுலபமாக பெயர்க்க முடிந்தது. எனவே, ஒரு பாறையே போதும் என்ற எண்ணத்தில் சென்றுவிட்டனர். கொண்டு சென்ற பாறையை அடித்து, உடைத்து, செதுக்கி தம் திறமைகளால் பொலிவு மிக்க புத்தர் சிலையை உருவாக்கினர்.

இந்நாட்களிலே பாறைகள் கிடந்த மலையின் மீது புத்தர் கோயில் கோலாகலமாக எழுப்பப்படுகிறது. ஒரு நன்னாளில் அந்த புத்தர் சிலை, கோயிலுக்குள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். கடவுளாய் மாறுகிறது. மாற்றதை விரும்பியதால் தன்னுள் இருந்த புத்தனை வெளிக்கொணர்ந்தது முதல்பாறை.

தன்னுள்ளும் ஞான முதல்வன் புத்தன் இருந்தாலும், மாற்றத்தை விரும்பாமல் மதிமயக்க மனதோடு இருந்ததால் இரண்டாவது பாறை மலையேறுவோரின் காலடிப் படியாய் மாறிப்போனது. இரு பாறைகளுக்குமான வாய்ப்புகள் ஒன்றே. ஆனால் மாற்றத்தை மனதார ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே நம் உள்ளிருக்கும் 'புத்தன்' வெளிப்படுகிறான்.

உங்கள் வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி பொங்கக்கூடிய நிகழ்வுகளோ அல்லது சோகம் நிறைந்த கதையோ நிச்சயமாக இருக்கும். அவற்றை அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் கேட்க ஆரம்பியுங்கள். இதுவே கற்பித்தலின் முதல்படி.

வகுப்பறையில் கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியரைவிட, கற்றலைத் தூண்டுகின்ற ஆசிரியரைவிட, ஒரு மாணவனின் சுயசிந்தனையை தட்டி எழுப்புகின்ற, தூண்டுகின்ற ஆசிரியர்களைத் தான் இன்றைய உலகம் எதிர்பார்க்கிறது. ஆகவே கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளையும் தாண்டி, சுய சிந்தனையை வளர்த்தெடுக்கும் விதமாக உங்கள் கற்பித்தல் முறையை அமைத்துக் கொள்ளுதல் கற்பித்தலின் இரண்டாம் படியாகும்.

நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறையில் ஒரு குழந்தையால் கற்றுக்கொள்ள இயலவில்லை எனில், அது கற்றுக் கொள்ளும் வகையில் உங்கள் கற்றல் முறைகளை மாற்றுங்கள். இது கற்பித்தலின் மூன்றாம் படியாகும்'' என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

Label