ஈரோடு, செப். 7-
ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
ஒரு ஏழைப் பெண் கைக் குழந்தையுடன் வந்து, புரட்சித் தலைவரின் காலில் விழுந்தார்.
""ஐயா... என் கணவர் இறந்து விட்டார். கைக் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்வதற்கே வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தையின் பசியைத் தீர்ப்பதற்குக் கூட என்னால் முடியவில்லை. எதாவது உதவி செய்யுங்கள் என்று அழுது கொண்டே கேட்டார்.""
புரட்சித் தலைவர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிவிட்டு,
தனது உதவியாளரை அழைத்து, அவரது அறையில் அந்தப் பெண்ணை உட்கார வைக்கச் சொன்னார். உதவியாளரும் உட்கார வைத்தார்.
சிறிது நேரம் கழித்துப் போய்ப் பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார்.
அந்த அறையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புண்ணிய ஸ்தலமாகவே நினைத்தார். காரணம், அந்த அறையில் புரட்சித் தலைவர் தெய்வமாக வணங்கும், அவரது தாய் சத்யாவின் ஆளுயர திருவுருவப் படம் இருந்தது. அந்தப் படத்திற்கு அடியில் புரட்சித் தலைவர் அமரக் கூடிய ஆசனம் ஒன்று இருந்தது.
தாயை வணங்கி விட்டு, அந்த ஆசனத்தில் புரட்சித் தலைவர் அமர்வது வழக்கம். புரட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் அந்த ஆசனத்தில் அமர்ந்தது இல்லை.
ஆனால், புரட்சித் தலைவரைப் பார்க்க வந்த ஏழைப் பெண்,
பசி மயக்கத்தில் வியர்வை வடிந்தபடி அந்த ஆசனத்தில் கண் அயர்ந்து படுத்துத் தூங்கி விட்டார்.
புரட்சித் தலைவர் வந்து பார்த்தால் என்ன சொல்வாரோ என்ற பயத்தோடு உதவியாளர் நிற்கும் பொழுது, புரட்சித் தலைவர் அங்கு வந்து விட்டார்.
அந்தப் பெண் அயர்ந்து தூங்குவதைப் பார்த்து விட்டு, காற்றோட்டமாக தூங்கட்டும் என்று, மின் விசிறி சுவிட்சைப் போட்டார்.
அந்த பெண்ணின் தூக்கம் கெட்டு விடக்கூடாது என்று நினைத்து, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்.
தூக்கம் களைந்து, எழுந்த அந்தப் பெண். பதறிப்போய்
புரட்சித் தலைவரை பயத்துடன் பார்க்க, """"அம்மா பயப்பட வேண்டாம், உங்களுக்கு வேண்டிய உதவி நாளை, உங்கள் வீடு தேடி வரும்,
நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்"", என்று கூறி, செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
எல்லாப் பெண்களையும், தாயாகவே நேசித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அதனால்தான், அவர்
உருவாக்கிய இயக்கத்தை, அவருக்குப் பிறகும் காப்பாற்றுவதற்காக, நமக்கு ஒரு தாயை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றார்.
அந்த கொடை வள்ளல், எவ்வளவோ கொடுத்திருக்கிறார்.
அவர் கொடுத்த கொடைகளிலே, மிகப் பெரிய கொடை, இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நமக்கு கொடையாகக் கொடுத்ததுதான்.