OUR CLIENTS
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சாய்னா, சிந்து வெற்றி
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சாய்னா, சிந்து வெற்றி Posted on 12-Aug-2016 ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சாய்னா, சிந்து வெற்றி

ரியோ:
ஒலிம்பிக் பேட்மிண்டனில் சாய்னா, சிந்து தங்களது முதல் ஆட்டங்களில் வெற்றி கண்டனர். ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது. பெண்கள் ஒற்றையரில் 13 பிரிவுகளாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் லீக்கில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் வீராங்கனைகள் அடுத்த சுற்றை அடைவார்கள்.


இதில் தரவரிசையில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் அங்கம் வகிக்கும் ஏ, இ, பி பிரிவில் முதலிடம் பிடிப்போர் மட்டும் நேரடியாக கால்இறுதிக்கும், மற்ற பிரிவினர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெறுவார்கள்.

'எம்' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, ஹங்கேரியின் லாவ்ரா சரோசியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சரமாரியான ஷாட்டுகளை விளாசி எதிராளியை விழிபிதுங்க வைத்த பி.வி.சிந்து 21-8, 21-9 என்ற நேர் செட் கணக்கில் சரோசியை போட்டு தாக்கினார். வெறும் 27 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிந்து தனது 2-வது மற்றும் கடைசி லீக்கில் மிசெலி லியுடன் (கனடா) நாளை மறுதினம் மோதுகிறார்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மற்றொரு இந்திய புயல் சாய்னா நேவால், மரியா யுலிடினா (உக்ரைன்), விசென்ட் லோஹய்னி (பிரேசில்) ஆகியோருடன் 'ஜி' பிரிவில் இருக்கிறார். தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் முதல் லீக்கில் 73-ம் நிலை வீராங்கனையான விசென்ட் லோஹய்னியுடன் மோதினார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய விசென்ட் தொடக்கத்தில் சாய்னாவை தடுமாற விட்டார். ஒரு கட்டத்தில் சாய்னா 13-14 என்று பின்தங்கினார். அதன் பிறகு சுதாரித்து கொண்ட சாய்னா சரிவில் இருந்து எழுச்சி பெற்று முதல் செட்டை வசப்படுத்தினார். இதைத் தொடர்ந்து 2-வது செட்டில் எதிராளியின் கையை ஓங்க விடாமல் பார்த்துக் கொண்டார். 39 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் இறுதியில் சாய்னா நேவால் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றியை சுவைத்தார். சாய்னா அடுத்து மரியா யுலிடினாவுடன் நாளை மறுதினம் சந்திக்கிறார்.

பெண்கள் இரட்டையரில் தலா 4 ஜோடிகள் வீதம் 4 பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் ஜோடிகள் கால்இறுதிக்குள் நுழையும்.

'ஏ' பிரிவில் இடம் வகிக்கும் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி, தங்களது முதல் சவாலை உலகின் 'நம்பர் ஒன்' கூட்டணியான ஜப்பானின் மிசாகி மாட்சுடோமோ- தகஹசி அயகா இணையுடன் தொடங்கியது. எதிர் ஜோடியின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஜூவாலா-அஸ்வினி ஜோடி 15-21, 10-21 என்ற நேர் செட்டில் பணிந்தது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் ஜூவாலா-அஸ்வின் கூட்டணி வென்றால் மட்டுமே கால்இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

ஆண்கள் இரட்டையர் பிரிவும் இதே பாணியில் நடத்தப்படுகிறது. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் அனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில் 18-21, 13-21 என்ற நேர் செட்டில் அஷன் முகமத்- செதிவான் ஹேந்த்ரா (இந்தோனேஷியா) இணையிடம் தோல்வியை தழுவியது.

Label