OUR CLIENTS
இசை அரசி எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு தபால் தலை: 15-ம் தேதி ஐ.நா. சபையில் வெளியாகிறது
இசை அரசி எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு தபால் தலை: 15-ம் தேதி ஐ.நா. சபையில் வெளியாகிறது Posted on 12-Aug-2016 இசை அரசி எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு தபால் தலை: 15-ம் தேதி ஐ.நா. சபையில் வெளியாகிறது

நியூயார்க்:
இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி ஐ.நா. சபையின் சார்பில் மறைந்த பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு தபால் தலை வெளியிடப்படுகிறது.


50 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. சபையால் அழைக்கப்பட்டு அங்கு சென்று இசைக் கச்சேரி செய்த முதல் இந்தியர், இசை கலைஞர்களில் முதன்முதலாக ‘பாரத ரத்னா’ பட்டம் பெற்றவர் உள்பட பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் பெற்றவர், மறைந்த பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி.

ஒருமுறை இவரது இசை கச்சேரியை நேரில் கேட்டு ரசித்து பரவசம் அடைந்த ஜவஹர்லால் நேரு, ’நான் சாதாரண பிரதமர். எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு அரசி, இசையின் அரசி. என மனம்குளிர்ந்து வாழ்த்தினார்.

அவரது பிறந்தநாள் வரும் செப்டம்பர் மாதம் 16-ம் தேதி என்பதால் இந்த ஆண்டு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100-வது பிறந்ததின ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ஐ.நா.வில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு நினைவாஞ்சலி செலுத்தும் விதமாக இன்னிசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

இந்நிலையில், இவ்விழாவின்போது எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே. அக்பர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

Label