OUR CLIENTS
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு! : அமைச்சரவை ஒப்புதல்
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு! : அமைச்சரவை ஒப்புதல் Posted on 12-Oct-2017 ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி  அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு! : அமைச்சரவை ஒப்புதல்

சென்னை, அக்.12-
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுபானங்களின் விலையை உயர்த்தவும்,  தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் மற்றும் டெங்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், டாஸ்மாக் வருமானத்தை பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்தவும், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பீருக்கு 10 ரூபாயும், குவார்ட்டருக்கு 12 ரூபாயும் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும்.

மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கியது. நேற்று கூடிய தமிழக அமைச்சரவையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, குறைந்த பட்ச ஊதியம் ரூ.6100-ல் இருந்து ரூ.15700 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்ச ஊதியம் ரூ.77 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

மேலும், முந்தய ஊதியக்குழுக்களால் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகள் உயர்த்தப்பட்டதை விட இம்முறை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதேபோல், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 என்றும் அதிகபட்ச ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு இம்மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிப்பின் மூலம் எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும், இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவாகும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label