OUR CLIENTS
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க ஸ்டாலின் கோரிக்கை
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க ஸ்டாலின் கோரிக்கை Posted on 12-Oct-2017 தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான  வாட் வரியை குறைக்க ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, அக்.12-
பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் நேற்று விடுத்துள்ள அறிக்கை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தினமும் விலை நிர்ணயம் என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல் - டீசல் விலையை தினமும் உயர்த்தி மக்கள் மீது, குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்கமுடியாத சுமையைத் தூக்கி வைத்துள்ளது.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போதெல்லாம் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும்  அதற்குத் துணையாக, வாய்மூடி மவுனியாக இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசு திணிக்கும் சுமையை அப்படியே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு கைமாற்றி அனுப்பிவிட்டு கை கழுவுகிறது.

கடந்த காலத்தில் திமுக அரசு செய்தது போலவே, தற்போது குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 1 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுபற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதும், வாட் வரியை குறைத்து அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் இருப்பதும், இங்குள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கோ, அமைச்சர்களுக்கோ தமிழக மக்கள் படும் துயரங்கள் பற்றிக் கவலையில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.  இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 70.96ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.60.04ம் கொடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த குதிரை பேர அரசுக்கும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆகவே, ஏற்கனவே இருந்த திமுக அரசும், தற்போது குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசுகளும் எடுத்துள்ள நடவடிக்கைகளை பின்பற்றி, தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து, அவற்றின் மீதான வாட் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Label