OUR CLIENTS
தீபாவளி விடுமுறை நாளிலும் வேலை: அரசு ஊழியர்கள் அதிருப்தி
தீபாவளி விடுமுறை நாளிலும் வேலை: அரசு ஊழியர்கள் அதிருப்தி Posted on 15-Oct-2017 தீபாவளி விடுமுறை நாளிலும் வேலை: அரசு ஊழியர்கள் அதிருப்தி

சென்னை, அக். 15-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, கோர்ட்டு இதில் தலையிட்டதால் அந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்தனர். கோர்ட்டில், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த காலத்தில் பணிக்கு செல்லாததால் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்று கேட்டனர்.

அதற்கு சம்மதம் தெரிவித்து அரசு சம்பளத்தை பிடிக்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக அவர்கள் வார விடுமுறை நாளில் பணி செய்து அந்த நாட்களை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அந்தவகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு, அந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரி வேதரத்தினம் என்பவர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதில் ‘தாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட 7 நாட்களை சரிக்கட்ட 14(நேற்று), 21, 28, அடுத்த மாதம்(நவம்பர்) 4, 11, 18-ந்தேதிகளிலும் (சனிக்கிழமைகளில்), 18.10.2017 (தீபாவளி விடுமுறை) தேதியிலும் பணிக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வார விடுமுறை நாட்களை தவிர, தீபாவளி விடுமுறை நாளிலும் பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறுகையில், ‘அரசு விடுமுறை(தீபாவளி பண்டிகை) என்று அறிவித்த நாளில் ஒருவரை பணிக்கு வரச்சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?. இது பழிவாங்கும் நடவடிக்கை போலவே இருக்கிறது. கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தபடி கடிதம் அனுப்பப்பட்ட ஊழியருக்கு, 7 நாள் சம்பளமும் வழங்கவில்லை’ என்றார். தீபாவளி விடுமுறை நாளில் பணிக்கு வரச்சொல்லிய உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். வேலைநிறுத்த காலத்தை ஈடு செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆணையிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் ஆணையிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது 18-ந்தேதி என்ன விடுமுறை நாள் என்பதே தெரியாமல் இப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். எப்படியாக இருந்தாலும் இரண்டுமே தவறு தான். அமைச்சர் நிலையில் விவாதிக்காமல் இப்படி ஒரு முடிவை இணைச்செயலாளராக இருப்பவர் எடுக்க முடியாது.

மிகவும் அபத்தமான இந்த உத்தரவு உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். இதுகுறித்து விசாரித்து இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Label