OUR CLIENTS
டி.டி.வி.தினகரனை கொட்டும் தேனி மாவட்ட ஓ.பி.எஸ்.அணி!
டி.டி.வி.தினகரனை கொட்டும் தேனி மாவட்ட ஓ.பி.எஸ்.அணி! Posted on 16-Oct-2017 டி.டி.வி.தினகரனை கொட்டும் தேனி மாவட்ட ஓ.பி.எஸ்.அணி!

தேனி, அக்.16-
தேனி மாவட்ட அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் தனது பக்கம் வளைத்து போடுவதில் வேகம் காட்டி வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பலரும் அந்தர் பல்டி அடித்து அணி மாறி வருவதால் தினகரன் அணியினர் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்று தர்மயுத்தம் நடத்தி வந்தபோதிலும் அவரது அணியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஆட்கள் இல்லை. பெரும்பாலானவர்கள் தினகரன் தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமி அணியிலேயே இருந்தனர். இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் தர்மயுத்த பொதுக்கூட்டம் உட்பட எந்த கூட்டமும் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடத்தப்படவில்லை. மேலும் காதுகுத்து கல்யாணம் என்று சொந்த மண்ணுக்கு வரும் ஓ.பன்னீர்செல்வம் இங்கு தங்குவதே இல்லை. விசேஷ வீட்டில் மொய் எழுதிவிட்டு சென்னைக்குச் சென்றுவிடுவதே வழக்கம். இந்தநிலையில் தர்மயுத்தத்தில் வெற்றி பெற்றாரோ என்னவோ அது ஆண்டவனுக்கே வெளிச்சம், இதற்கிடையே எடப்பாடி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்த பிறகு அடுக்கிய செங்கற்களை உருவியது போன்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சரியத் தொடங்கி விட்டனர். 

மாவட்டத்திலுள்ள நிர்வாகிகளை தூக்கும் வேலையை தனது அணியைச் சேர்ந்த தனக்கு நம்பிக்கைக்கு உரியவரான எம்.பி.பார்த்திபனிடம் ஒப்படைத்தார் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து பார்த்திபனும் ஒரு குழுவை அமைத்து கட்சி நிர்வாகிகளுக்கு கண்ணி வைத்தார். இதில் முதலில் சிக்கியவர் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன். மேலும் மொத்தமுள்ள 8 ஒன்றிய செயலாளர்களில் டி.டி.வி.தினகரன் அணியின் தளபதியாக கருதப்படும் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு மிக நெருக்கமாக இருந்த தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிப்பட்டி பால்பாண்டி, கம்பம் இளையநம்பி, போடிநாயக்கனூர் சற்குணம் ஆகிய 5 ஒன்றியச் செயலாளர்களை தங்கள் பக்கம் இழுத்து டி.டி.வி.தினகரன் அணிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.

அதேபோனறு தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகர செயலாளர்களில் நான்கு பேர் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தனர். இவர்களில் போடி மற்றும் தேனி நகர செயலாளர்கள் பால்பாண்டி, முருகேசன ஆகியோரையும் ஓ.பன்னீர்செல்வம் அணி வளைத்து போட்டு விட்டது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி செயலாளர்களில் 19 பேர் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தனர். இதில் 11 பேர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் மேலும் 615 ஊராட்சி செயலா ளர்களில் 250க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வந்துவிட்டனர். தவிர, தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 50 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் 35 பேர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தாவிவிட்டனர். 

அதிமுகவின் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே தற்போது டி.டி.வி.தினகரன் அணியில் நீடிக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, தேனி மாவட்டம் முழுவதும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகி இருப்பதால் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் என பலரையும் மிரட்டி தங்களது அணிக்கு இழுக்கின்றனர். அதேபோல அங்கன்வாடி பணியாளர் நியமனம் தொடர்பாக பணம் பெற்ற டி.டி.வி.அணியினர் மீது போலீசில் புகார் அளித்து கைது செய்யப் போவதாக மிரட்டி ஆள்பிடிக்கும் வேலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என்கின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின், உண்மையைச் சொல்ல வேண்டுமானால் போடி நகர செயலாளரும்,ஒன்றிய செயலாளரும் தங்களது மனைவிகளுடன் வந்து துணை முதல்வரிடமும் அவரது மனைவியிடமும் மன்னிப்பு கேட்டு கெஞ்சிதான் கோரிக்கை வைத்து சேர்ந்தார்கள். இவர்களை நமது அணியில் சேர்க்க கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் விசுவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும நிலையில்தான் இங்கு கட்சி இருக்கிறது என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
தங்க.தமிழ்ச்செல்வன் ஆதரவாளரும், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளருமான மணி கூறுகையில், சாதாரண ஆளான ஆர்.டி.கணேசனுக்கு எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தவர் தினகரன். ஆனால் நன்றி மறந்த கணேசன் தற்போது ஓ.பி.எஸ். அணியில் சேர்ந்துவிட்டார். இதேபோல் பலரும் மிரட்டலுக்கு பயந்து எதிர் அணிக்குச் சென்றுள்ளனர் என்றார். ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி எம்பியுமான ஆர்.பார்த்திபன் கூறுகையில், இரு அணிகளாக பிரிந்தபோது எங்கள் பக்கம் 10 சதவீதம் பேர் நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். அதேசமயம் தினகரன் பக்கம் 90 சதவிகித நிர்வாகிகள் இருந்தனர். இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது. நாங்கள் யாரையும் மிரட்டி அழைக்கவில்லை. தங்க.தமிழ்ச்செல்வனுக்கு கூட இரண்டு முறை அழைப்பு விடுத்தேன் அவரிடம் இருந்து பதில் வரவில்லை என்றார். இப்படி தேனி மாவட்டத்தில் தேனி கூடு கலைக்கப்பட்டது. புதியதாக தேனி கூடு கட்டத் தொடங்கியுள்ளது. ராணி தேனியின் சுறுசுறுப்பு தொடருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label