OUR CLIENTS
பாஜகவுக்கு நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்
பாஜகவுக்கு நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் Posted on 23-Oct-2017 பாஜகவுக்கு நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை, அக். 23-
நடிகர் விஜயை வளைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறினார்.

விஜய் நடித்து தீபாவளி அன்று திரையிடப்பட் வந்த ‘மெர்சல்’ படத்தில், அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகள் மக்களிடையே பலத்த கைத்தட்டல்களைப் பெற்றுள்ளது.

மருத்துவர்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் பாதிப்பும் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசை குறை கூறியிருப்பதாக கூறி, நடிகர் விஜய்யை பாரதீய ஜனதா கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் கூறி வருகிறார்கள். அந்தக் காட்சிகளை நீக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

கருத்து சுதந்திரத்தை திமுக ஆதரிக்கும் என மு.க. ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார். ஏற்கனவே சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்வதற்கு தங்களிடம் மெர்சல் படத் தயாரிப்பு குழுவினர் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளனர் சென்சார் அதிகாரிகள். ஏற்கனவே தணிக்கை செய்யப் பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

மெர்சல் திரைப்படக் காட்சிகளை நீக்குவதற்கான காரணங்களைக் காட்டி நடிகர் விஜயை வளைத்துப்போட பாஜக முயற்சிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் விஜயை வளைத்து போட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கட்டப்பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பவர் திருமாவளவன்தான் எனக் கூறியுள்ளார்.

மேலும், கரூரில் நடைபெறும் பொது குழுவில் அரசியல் சூழல், சென்னை - ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

எச். ராஜா பற்றி நடிகர் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்த தகவலை நான் பார்க்கவில்லை. தவறான கருத்துகள் எந்த படத்தில் வந்தாலும் அவற்றை நீக்குவதற்கு நாங்கள் கோரிக்கை வைப்போம். காங்கிரஸ் ஆட்சியில் அவசர நிலை பற்றிய திரைப்படம் வந்தபொழுது முடக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. பற்றி காங்கிரஸ் கட்சி தவறான தகவல்கள் தருவதை நிறுத்த வேண்டும். நல்ல திட்டங்களை அரசு கொண்டு வரும்பொழுது எழும் விமர்சனங்களைக் கண்டு நாங்கள் அஞ்ச போவதில்லை என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

நேற்று தமிழிசை தனது ட்வீட்டரில், விஜய் படம் மட்டுமல்ல, எந்தப் படத்தில் ஜிஎஸ்டி பற்றி கூறப்பட்டிருந்தாலும், பாஜக கருத்துக்களை முன்வைக்கும் என்று கூறியுள்ளார். அதாவது ஜிஎஸ்டி, டீமானிடைசேஷன் போன்ற எந்தப் பிரச்னையையும் காட்சிகளாகவோ, வசனங்களாகவோ இனி சினிமாவில் வைக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று தமிழிசை டுவிட்டரில் மறு டுவிட் செய்துள்ளார்.

Label