OUR CLIENTS
விவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க கூடாது மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
விவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க கூடாது மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Posted on 24-Oct-2017 விவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க கூடாது மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை, அக்.24-
விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தை நிதி அயோக் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  “விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும்”, என்ற நிதி அயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் பேட்டிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

65 ஆண்டுகாலம் இருந்த திட்டக்குழுவை கலைத்து விட்டு 2015-ல் ‘நிதி அயோக்’ அமைப்பை ஏற்படுத்தியபோது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முன் வைத்த முழக்கம் ‘கூட்டுறவு கூட்டாட்சி’! நிதி அயோக் அமைத்த மத்திய அரசின் அமைச்சரவை தீர்மானத்தில் இதன் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  நிதி அயோக் அமைப்பின் 13 நோக்கங்களில் ஒன்று, “வலுவான மாநிலங்கள் சேர்ந்துதான் வலுவான நாட்டை உருவாக்க முடியும்” என்று கூறிவிட்டு, இன்றைக்கு மாநிலங்களை மாநகராட்சிகளாகவும், நகராட்சிகளாகவும் தரம் தாழ்த்தும் அளவிற்கு மாநிலங்களிடம் உள்ள ஒவ்வொரு அதிகாரமாக பறித்துக் கொள்ள மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இந்த ‘நிதி அயோக்’ அமைப்பை பயன்படுத்துவது மிகவும் வேதனையளிக்கிறது.

பிரதமரும், முதல்வர்களும் பங்கேற்ற நிதி அயோக் அமைப்பின் முதல் கூட்டம் 08.02.2015 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி “வேளாண்துறைக்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வது” தொடர்பாக 16.03.2015 அன்று பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி 16 மாநிலங்கள் இதுவரை வேளாண்துறை சீர்திருத்தங்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன. அப்படியொரு கருத்து தமிழகத்தின் சார்பில் இதுவரை தெரிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. வேளாண் சீர்திருத்தத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ள இந்த 16 மாநிலங்களில் குஜராத் உள்ளிட்ட எந்த மாநிலமும் “விவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறவில்லை.

இந்த பணிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு ‘ஆய்வு அறிக்கை’ 16.12.2015ல் நிதி அயோக் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் ‘விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’ என்று எந்த பரிந்துரையும் இல்லை. இத்தனைக்கும் இந்த பணிக்குழு நிதி அயோக் அமைப்பின் துணை தலைவர் தலைமையில்தான் இயங்குகிறது. 

ஏனென்றால் நிதி அயோக் அமைப்பின் ‘பணிக்குழு’ அறிக்கையிலோ, இதுவரை மாநிலங்கள் கொடுத்துள்ள பரிந்துரைகளிலோ இல்லாத ஒரு வி‌ஷயத்தை அதாவது “விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்ற கருத்தை நிதி அயோக் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

சில தினங்களுக்கு முன்பு தனியார் துறையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று நிதி அயோக் தெரிவித்த விபரீத கருத்தும் இதே வகையைச் சேர்ந்த தலையீடு என்றே எண்ண வேண்டியதிருக்கிறது.  ஆகவே சமூக நீதிக் கொள்கைகளிலும், கூட்டாட்சி தத்துவத்திலும் குறுக்கிடும் வகையில் ‘நிதி அயோக் அமைப்பில்’ உள்ள உறுப்பினர்களும், துணை தலைவரும் விபரீதமான கருத்துக்களை தெரிவிப்பதை அதன் தலைவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘கூட்டுறவு கூட்டாட்சி முழக்கத்தை’ மறந்து, மாநில உரிமைகளை பறிப்பதற்கு நிதி அயோக் அமைப்பை பயன்படுத்துவதுதான் நோக்கம் என்றால், அதன் நிர்வாக குழுவில் மாநிலங்களின் முதலமைச்சர்களும் உறுப்பினர்களாக இடம்பெறுவதில் துளிகூட அர்த்தமில்லை என்பதை உணர்ந்து, நிதி அயோக் அமைப்பின் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label