OUR CLIENTS
டாஸ்மாக் மதுவில் உயிரை கொல்லும் மோசமான அமிலம்! : ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு
டாஸ்மாக் மதுவில் உயிரை கொல்லும் மோசமான அமிலம்! : ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு Posted on 24-Oct-2017 டாஸ்மாக் மதுவில் உயிரை கொல்லும் மோசமான அமிலம்! : ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு

சென்னை, அக்.24-
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் உயிரை கொல்லும் மோசமான அமிலம் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மது அருந்துவது உடலுக்குக் கேடு... அதிலும் டாஸ்மாக் மதுவகைகளை அருந்துவது மிக மிகக் கேடு என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அமிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ரம் மதுவில் குறைந்தபட்ச தரம் கூட இல்லை என்பதும், அதில் டார்டாரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், எத்தில் அசிடேட் ஆகிய வேதிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றால் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.  டார்டாரிக் அமிலமும், அசிட்டிக் அமிலமும் திராட்சை, எலுமிச்சை போன்ற பழங்களில் கூட இருப்பவை தான். ஆனால், இவற்றின் அளவு அதிகமானால் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். டார்டாரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, வயிறு மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். அசிட்டிக் அமிலம் அதிகமானால் குடல் அரிப்பு, நெஞ்சு எரிச்சல், செரிமான அமைப்பு சேதமடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது உறுதி என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்து அதனாலும் பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

ரம் மதுவில் அளவுக்கு அதிகமாக அமிலங்கள் இருந்தது குறித்த வி‌ஷயத்தில் கூட உணவுப் பாதுகாப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தரம் குறைந்த மதுவை விற்பனை செய்த கோயம்பேடு மதுக்கடை, நெடுஞ்சாலையோர மதுக்கடைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மூடப்பட்டு விட்டதாகவும், அதனால் அக்கடை மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று கூறி இப்பிரச்சினையை கைவிட்டு விட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

சம்பந்தப்பட்ட மது ஆலை மீது நடவடிக்கை எடுக்காமல் உணவுப் பாதுகாப்புத்துறை தட்டிக் கழித்திருப்பதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய ரம் வகை மது ஆய்வுக்கு அனுப்பப்பட்டதால் தான் அதில் அமிலங்களும், நச்சுக்களும் கலந்திருப்பது தெரியவந்தது. மற்ற மது வகைகளிலும் இதே போன்ற நச்சுக்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், எத்தகைய ஆய்வையும் நடத்தாமல் உணவுப் பாதுகாப்புத்துறை வேடிக்கைப் பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்துமாறு 8.7.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால், இன்று வரையிலான 14 ஆண்டுகளில் ஒருமுறை கூட மது வகைகளின் தரம் குறைத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதது துரதிருஷ்டவசமானது.  உணவுப் பாதுகாப்பு ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள இ.ஆ.ப. அதிகாரி பெ.அமுதா நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது தர ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் தொடர்ந்து மக்களின் உயிரை பறிப்பதை அனுமதிக்கக்கூடாது. உடனடியாக அனைத்து மதுவகைகளையும் தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மேலாக இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label