OUR CLIENTS
மு.க.ஸ்டாலின் 6 வாரம் எழுச்சி பயணம்... நிறைவு நாளில் ராகுல் பங்கேற்பு!
மு.க.ஸ்டாலின் 6 வாரம் எழுச்சி பயணம்... நிறைவு நாளில் ராகுல் பங்கேற்பு! Posted on 24-Oct-2017 மு.க.ஸ்டாலின் 6 வாரம் எழுச்சி பயணம்... நிறைவு நாளில் ராகுல் பங்கேற்பு!

சென்னை, அக்.24-
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணத்தை தொடங்க உள்ளார்.

தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தபோது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  “நமக்கு நாமே” என்ற பெயரில் அவர் மாவட்டம் தோறும் பல்வேறு தரப்பு மக்களையும் ஒரே இடத்தில் திரளச் செய்து, நேரில் சந்தித்து பேசி ஆதரவு திரட்டினார்.  நமக்கு நாமே கூட்டங்கள் மூலம் ஒவ்வொரு பகுதி பிரச்சினைகள், தேவைகளை மு.க.ஸ்டாலினால் தெளிவாக, துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அவர் வாக்குறுதிகள் அளித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். 

இதன் காரணமாக “நமக்கு நாமே” பிரசாரம் தமிழக மக்களிடம் நகரம், கிராமம் வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. அதனால்தான் கடந்த தேர்தலில் தி.மு.கழகத்துக்கு 90-க்கும் மேற்பட்ட இடங்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்று கூறப்பட்டது.  இந்த நிலையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மீண்டும் “நமக்கு நாமே” பயணத்தை தொடங்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இந்த தடவை அவரது பிரசார பயணத்துக்கு “நமக்கு நாமே-எழுச்சி யாத்திரை” என்று பெயரிடப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு நமக்கு நாமே பயணத்தின்போது மு.க.ஸ்டாலின் நடைபயணம் செய்தது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. எனவே இந்த தடவை மக்களை மேலும் நெருங்கிச் செல்லும் வகையில் எழுச்சி யாத்திரைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இந்த எழுச்சி பயணம் குறித்து தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-  கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் நமக்கு நாமே நடைபயணம் சென்றார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து குறை கேட்டார். இதற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தி.மு.க.வின் வாக்கு வங்கியும் அதிகரித்தது.

அதேபோல் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் ஆட்சியின் அலங்கோலங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணத்தை தொடங்க உள்ளார்.  இதற்கான தொடக்க விழா பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி. திடலில் வருகிற 7-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி எழுச்சி பயணத்தை தொடங்கி வைக்கிறார்.

அதன்பிறகு தென்மாவட்டத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணத்தை தொடங்குகிறார். வாரத்தில் 3 நாட்கள் பயணம் செய்து மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.  இதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை என 6 மண்டலமாக பிரித்து 6 வாரம் எழுச்சி பயணம் செல்கிறார்.  ஒவ்வொரு பயண நிறைவின் போதும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக 6 இடங்களில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கூட்டத்திலும் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லல்லுபிரசாத் யாதவ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சீத்தா ராம் யெச்சூரி உள்பட பலர் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.  எழுச்சி பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம், சென்னை அல்லது காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் என தெரிகிறது.   இதில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சிறப்புரையாற்றுகிறார்.

நமக்கு நாமே பயணம் போல் ‘எழுச்சி பயணமும்’ மக்கள் மத்தியில் பிரபலமாகும் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப மு.க.ஸ்டாலினின் பயண விவரங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Label