OUR CLIENTS
ஆண்- பெண் கைதிகள் சந்திக்க ரகசிய ஏற்பாடு! : பணத்துக்கு விலை போன புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
ஆண்- பெண் கைதிகள் சந்திக்க ரகசிய ஏற்பாடு! : பணத்துக்கு விலை போன புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? Posted on 24-Oct-2017 ஆண்- பெண் கைதிகள் சந்திக்க ரகசிய ஏற்பாடு! : பணத்துக்கு விலை போன புதுச்சேரி காலாப்பட்டு  மத்திய சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?

புதுச்சேரி, அக்.24-
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் கைதாகி சிறையில் இருக்கும் பெண் தாதா எழிலரசி, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தாதா மர்டர் மணிகண்டனை சந்தித்து பேசியது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறையின் துணைக் கண்காணிப்பாளர் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் சிறைத்துறை ஐ.ஜி.பங்கஜ்குமார் ஜா. தமிழகத்தை காட்டிலும் பிச்சைக்காரர்கள் போல அலைவதுதான் புதுச்சேரி போலீசாரின் அன்றாட பணியாகும். சிறைத்துறை இதற்கு விதிவிலக்கல்ல என்று இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பார்கள். இது புதுச்சேரி சிறைத்துறை போலீசார் செயலில் உண்மையாகியுள்ளது.

புதுச்சேரி மத்திய சிறைச்சாலை காலாப்பட்டு பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இங்கு ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என தனித்தனியாக இரு பிரிவுகள் உள்ளன. மாநிலத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் மற்றும் தண்டனைக் கைதிகள் இங்குதான் அடைத்து வைக்கப்படுகின்றனர். தற்போது இந்த சிறையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் பெண்களாவார்கள். 

காலாப்பட்டு சிறையில் இருந்து கொண்டே பிரபல ரௌடிகள் தொலைபேசியில் பேசி தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் , வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு சிறை வார்டன்களே கைதிகளுக்கு செல்போனை கொடுத்து உதவுவதாகவும் கூறப்படுகிறது. தவிர பவர்ஃபுல்லான ரௌடிகள் சிறை அதிகாரிகள் மற்றும் வார்டன்களை கவனித்துவிட்டு சிறைக்குள் சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாகவும் புகார்கள் உண்டு. 

இந்தநிலையில்தால், இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா மர்டர் மணிகண்டனும், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் தாதா எழிலரசியும் ஒருவரையொருவர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் பேசியதற்கு , அதாவது சந்திப்பதற்கு சிறை வார்டனே உதவி செய்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. 

பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் இருந்து குற்றவாளிகள் வெளியே செல்வதென்றால் சிறை வார்டன் ஒருவர் துணையோடுதான் செல்ல முடியும். நிலைமை இப்படியிருக்க இருவரும் சந்தித்து கொண்டது எப்படி? என்ற சந்தேகம் பலருக்கும் ஒருபுறம் இருந்து கொண்டே இருந்தது.

காலாப்பட்டு மத்திய சிறைத்துறை வட்டாரத்தில் இதுதொடர்பாக பேசி வந்தனர். கடந்த வாரம் சிறையின் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், தாதா மர்டர் மணிகண்டனையும், பெண் தாதா எழிலரசியையும் அழைத்து வரும்படி வாய்மொழியாக வார்டன்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி இருவரையும் வார்டன்கள் அழைத்து வந்துள்ளனர். சிறையில் உள்ள கண்காணிப்பு கோபுரம் அருகே இருவரையும் நிற்க வைத்துவிட்டு வார்டன்கள் சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது.

அங்கு நின்றவாறே எழிலரசியும், மர்டர் மணிகண்டனும் சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர். அப்போது தனது எதிரிகளை தீர்த்து கட்டுவது தொடர்பாகவும் அபகரிக்கப்பட்ட தனது சொத்துக்களை மீட்பது குறித்தும் மணிகண்டனிடம் எழிலரசி பேசியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருந்து ஜாமீனில் தான் வெளியே செல்லும் போது தனக்கு பாதுகாப்பாக 10க்கும் மேற்பட்டவ்களை உடன் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள் என்கிறார்கள்.
இந்த தகவல்கள் அனைத்தும் சிறைத்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து இந்த சந்திப்புக்கு வேறு பின்னணி இருக்குமா என்பது குறித்தும் புதுச்சேரி சிறையில் ஆண் கைதிகளும், பெண் கைதிகளும் சந்திப்பதற்கு சிறைக் காவலர்களே ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பணத்தை அள்ளி வீசி கைதிகள் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பெண் கைதிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்களா? என்ற கோணத்திலும், எந்தெந்த பெண் கைதிகளை எந்தெந்த ஆண் கைதிகளுடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த புலன் விசாரணையில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்கள் சிறைத்துறை ஐ.ஜி., பங்கஜ்குமார் ஜாவுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதி சிறை துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு, வார்டன்கள் கலாவதி, மதிவாணன் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே எழிரலசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து கடந்த 13ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழிலரசி வெளிவரும் நிலையில் அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு என்பது சிறையிலிருக்கும் மர்டர் மணிகண்டனுக்கும், எழிலரசிக்கும்தான் வெளிச்சம். புதுச்சேரி மாநிலம் மீண்டும் ஒரு பெரிய களேபரத்தை சந்திக்க தயாராகிவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த தலை யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label