OUR CLIENTS
காஞ்சிபுரத்தில் ரௌடிகள் துணையோடு தொழில் நடத்தும் ஜவுளி அதிபர்கள்!
காஞ்சிபுரத்தில் ரௌடிகள் துணையோடு தொழில் நடத்தும் ஜவுளி அதிபர்கள்! Posted on 25-Oct-2017 காஞ்சிபுரத்தில் ரௌடிகள் துணையோடு  தொழில் நடத்தும் ஜவுளி அதிபர்கள்!

காஞ்சிபுரம், அக்.25-
காஞ்சிபுரத்தில் பிரபல ரௌடி ஸ்ரீதர் உடல் அடக்கம் செய்யப்பட்டதுதான் தாமதம். தம்பி வா! தலைமையேற்க வா! அறிஞர் அண்ணா எழுதிய இந்த வலிமையான அரசியல் வார்த்தைகள் மீண்டும் காஞ்சிபுரத்தில் கேட்க தொடங்கியுள்ளது. ஆனால் அது அரசியலுக்கு அல்ல. அடிதடி, அராஜகம், அநியாயத்துக்காக இந்த வார்த்தைகள் ஒலிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் ஏகபோக சர்வாதிகாரி என தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்ட சாராய ரௌடி ஸ்ரீதரின் வாழ்வு தற்கொலையில் முடிந்தது. ஒழிந்தான் நரகாசுரன் என்று மக்கள் சந்தோஷத்துடன் சில நாள் கூட நிலைக்கவில்லை. 

ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரை பட்டத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் சில அடியாட்கள் ஈடுபட்டு கொண்டிருக்க அதற்கு சில தொழிலதிபர்கள் கோடிகளை கொட்டிக் கொடுத்து உதவி செய்திருக்கும் விஷயமும் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. பிழைப்புக்காக சாராய தொழிலில் ஈடுபட்ட ஸ்ரீதர் தொழில் ரீதியான எதிரிகளை மிரட்டவும், மிஞ்சினால் போட்டுத்தள்ளவும் கூலிக்கு ஆட்களை சேர்த்து கொண்டவன் ரியல் எஸ்டேட் தொழிலில் கால் பதித்த பிறகு தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டான்.

ஸ்ரீதரின் அடாவடிகள் அதிகரித்த பின்னர் ஸ்ரீதரை பெரியவர் என்றும், அவனது தம்பி செந்திலை சின்னவர் என்றும் அன்போடு அழைப்பதற்கு ஒரு கூட்டம் சேர்ந்தது. ரௌடியாக மாற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு முதலில் சின்னவர் அணியில்தான் இடம் கிடைக்கும். அங்கு சில காலம். பத்திரப்பதிவுக்கு பதிவாளர் அலுவலகம் போகும் போது பின்தொடர்ந்து போவது, செந்திலின் கார் கதவை திறப்பது, அண்ணன் சொன்னார் என்று அரசு அலுவலகங்களுக்கு போய் வருவது, பரம்பரை சொத்துக்களை வைத்திருக்கும் அப்பாவிகள் குறித்து தகவல் சொல்வது என எடுபிடி வேலைகள் செய்து திறமையை வளர்த்து கொண்ட பிறகு பெரியவர் அணிக்கு இடமாறுதல் கிடைக்கும். 

இப்படி ஸ்ரீதரால் உருவாக்கப்பட்ட ரௌடிகள் காஞ்சிபுரத்தில் ஏராளமாக உள்ளனர் என்கின்றனர் பொதுமக்கள். அவர்களில் சாதாரண நிலையில் இருந்து இன்று பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகி திமுக, அதிமுக  என அரசியல் கட்சிகளிலும் கால்பதித்துள்ளனர். அதிமுக ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், சங்கர்ராமன் மருமகன் முன்னாள் கவுன்சிலர் கண்ணன், சிறுவாக்கம் ஆனந்தன், அருள், விவேக், கமலக்கண்ணன், தசரதன், முன்னாள் நகர மன்றத் தலைவர் ராஜேந்திரனின் மகன் நைனா மணிவண்ணன், ஆதிகேசவன், தினேஷ், தீனா என நீளும் பட்டியலில் முக்கியமானவர்களே சுமார் 50 பேருக்கு மேல் தேரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஸ்ரீதருக்கு பணத்தாசை ஊட்டியும் கோடியில் கொட்டியும் கொடுத்தவர்கள் இரண்டு ஜவுளி அதிபர்கள். இவர்கள் இருவருமே பட்டுப்புடவைகளை வாங்கிச் சென்று வடமாநிலங்களில் விற்று பிழைப்பு நடத்தியவர்கள். படிப்படியாக காஞ்சிபுரத்தில் செட்டிலாகி இன்று மிகப்பெரிய அளவில் நாலைந்து ஜவுளி கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்களோடு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த உள்ளூர் பிரமாண்ட வியாபாரியும் கைகோர்த்து கொண்டார். காரணம், வடமாநில பட்டு வியாபாரிகளுக்காக தனது சொத்தை இழந்து விடுவோம் என்று அஞ்சி ஸ்ரீதரை அணைத்து கொண்டார். இவர்களைத்தான் இன்று பல அப்பாவி பட்டு வியாபாரிகள் தங்கள் சொத்துக்களையும் வீடு வாசல்களையும் இழந்தனர். இதற்கு மூளையாக இருந்ததே வடமாநில பட்டு ஜவுளி அதிபர்கள்தான். அவர்களை ஒட்டுமொத்த காஞ்சிபுரம் மக்களுமே புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்களை கண்டித்து காஞ்சி மக்கள் வெகு விரைவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகின்றது. 

இதுஒருபுறமிருக்க ஸ்ரீதர் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள லக்ஷ்மி திரையரங்கத்தையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் ஜவுளி நிறுவனம் ஒன்று வெறும் ரூ.65 கோடிக்கு பேசி முடித்திருக்கிறார்கள். இந்த டீல் முடிவதற்கு ஸ்ரீதருக்கு வழக்கம் போல அடியாட்கள் உதவி செய்திருக்கிறார்கள். இதற்கு கமிஷனாக அந்த ஜவுளிநிறுவனம் ஸ்ரீதர் தரப்புக்கு ரூ.10 கோடியை தாரை வார்த்திருக்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள சொத்துக்களை இதேபோல் மிரட்டி வாங்குவதற்கும், தொழில் ரீதியாக வேறு யாரும் ஜவுளி வியாபாரத்தில் தலை தூக்கி விடக்கூடாது  என்று மிரட்டுவதற்கும் ஸ்ரீதர் போல ஒரு ஆள் தேவைப்படுகிறது. இதனிடையே கம்போடியாவில் கடந்த 4ம் தேதி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்ட செய்தி கிடைத்ததும் பல தொழிலதிபர்கள் கலக்கமடைந்துவிட்டனர். ஸ்ரீதர் உருவாக்கிய இந்த நெட்வொர்க் சிதைந்துவிட கூடாது என்றும், ஸ்ரீதர் குடும்பத்தில் இருந்து ஒருவரை தலைவனாக்குவது என்றும் ஜவுளி அதிபர்கள் ஒன்று கூடி பேசி முடிவு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதற்கு ஏற்பாடு செய்தவர் மூன்று எழுத்து பெயரை கொண்ட தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜவுளி தொழிலதிபர்கள் ஸ்ரீதர் குடும்பத்தை அணுகி எத்தனை சட்ட சிக்கல் வந்தாலும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீதர் மகனை தங்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஜவுளி தொழிலதிபர்கள். இந்நிலையில் போலீசார் ஸ்ரீதரின் அடியாட்கள் 43 பேரை கைது செய்தது. ஜவுளி தொழிலதிபர்கள் 5 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் அடைத்தது காவல் துறை. 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹிதிமானி தொழிலதிபர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீதர் உயிரோடு இருந்தபோது அவனை வைத்து மிரட்டி சொத்துக்களை வாங்கியது குறித்தும், இறந்த பிறகும் கோடி கோடியாக கொடுத்து வரும் ஜவுளிக்கடை தொழிலதிபர்களின் செயல் காஞ்சிபுரத்தில் உள்ள மற்ற வியாபாரிகளை கொதிப்படையச் செய்துள்ளது. ஸ்ரீதரின் நெட்வொர்க் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காவல் துறை என்ன செய்யப்போகிறது.  இதற்கு தலைமை வகித்து வழிநடத்துபவர் ஒரு சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். காவல் துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label