OUR CLIENTS
தினகரன் ஆதரவு எம்.பி.க்களும் விரைவில் தகுதி நீக்கம்?
தினகரன் ஆதரவு எம்.பி.க்களும் விரைவில் தகுதி நீக்கம்? Posted on 25-Oct-2017 தினகரன் ஆதரவு எம்.பி.க்களும் விரைவில் தகுதி நீக்கம்?

சென்னை, அக்.25-
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ததைப் போல அவர் ஆதரவு எம்.பிக்களையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவில் உள்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. இரண்டாகப் பிளவுபட்ட அணி, பின்னர் மூன்றாக மாறி, இறுதியில் இரண்டாக மாறியுள்ளது. தற்போது அ.தி.மு.க அம்மா அணி, தினகரன் அணி என செயல்பட்டு வருகிறது. அதிலும், ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே உரசல் வலுத்து வருவதாகவும் தகவல்கள் பரவின. தினகரன் தரப்புக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏக்கள் 19 பேரும் ஆளுநரை சந்தித்து, முதல்வர் மீது நம்பிக்கை இல்லை' எனக் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இப்படி மனு கொடுத்ததால் சபாநாயகர் தனபால், இந்திய அரசமைப்புச்சட்டம் 10-வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ம் ஆண்டு சட்டப்பேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல் காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள் என அறிவித்தார். இதன்படி, தங்க தமிழ்செல்வன், ஆர்.முருகன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், எஸ்.முத்தையா, என்.ஜி.பார்த்திபன், கோதண்டபாணி, பாலசுப்ரமணி, ஏழுமலை, ரங்கசாமி, தங்கதுரை, எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்ரமணி, ஆர்.சுந்தர்ராஜ், கே.உமா மகேஷ்வரி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதில், ஜக்கையன் மட்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியதால், தகுதிநீக்கத்திலிருந்து தப்பித்தார். இதனை எதிர்பார்க்காத எம்.எல்.ஏக்கள், தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இம்மனு விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை தொடரும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தினகரன் தரப்புக்கு ஆதரவாக உள்ள எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரங்கள். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது. சபையில் உள்ள எம்.எல்.ஏக்களைக் கணக்கிட்டால், ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை. அதேநேரம், தினகரன் அணி என்று கூறிக் கொண்டு டெல்லியில் வலம் வரும் எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் 50 எம்.பிக்கள் வரையில் அ.தி.மு.கவுக்கு உள்ளனர். இவர்களில் ஆறு பேர் தினகரன் பக்கம் உள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக இவர்கள் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லையென்றாலும், இதைக் காட்டியே தினகரன் தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். 

எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ததைப் போல, எம்.பிக்களையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நீக்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. காரணம், சசிகலாவின் நியமனம் செல்லாது என முடிவெடுத்துவிட்டால், தினகரனின் வருகையும் செல்லாதாகிவிடும். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. அப்படிப் பார்த்தால், கட்சித் தாவல் நடவடிக்கைகளில் இந்த எம்.பிக்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறி நடவடிக்கை எடுக்க முடியும். இதனை அறிந்து தினகரன் பக்கம் இருக்கும் 6 எம்.பிக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காரணம், எம்.பிக்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளும் சம்பளமும் பறிபோய்விடும் என்பதுதான் என்கின்றனர்.

Label