OUR CLIENTS
பிரேத பரிசோதனைக்கு கட்டாய வசூல் : கல்நெஞ்சக்காரர்களான மருத்துவமனை ஊழியர்கள்!
பிரேத பரிசோதனைக்கு கட்டாய வசூல் : கல்நெஞ்சக்காரர்களான மருத்துவமனை ஊழியர்கள்! Posted on 27-Oct-2017 பிரேத பரிசோதனைக்கு கட்டாய வசூல் : கல்நெஞ்சக்காரர்களான மருத்துவமனை ஊழியர்கள்!

சேலம், அக்.27-
பிரேத பரிசோதனைக்கு, ஆயிரக்கணக்கில், கட்டாய வசூல் செய்வதால், இறந்தவர்களின் உறவினர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். 

சேலம் அரசு மருத்துவமனையில், 1,500க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இங்கு, மாவட்டத்தில் நடக்கும் தற்கொலை, கொலை, விபத்து உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன்படி, தினமும் சராசரியாக, 5 முதல், 10 சடலங்கள் வரை சோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை பிரிவில், ஐந்து மருத்துவர் குழு, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உடலை கட்டுவதற்கான துணி உள்ளிட்டவற்றை வாங்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், உறவினர்களிடம் துணி வாங்கி வர வற்புறுத்துவதாலும், 2,000 ரூபாய் வரை கட்டாய வசூல் நடத்துவதாலும், சடலங்களை பெற்றுச்செல்ல வரும் உறவினர்கள், அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது: பிரேத பரிசோதனை பிரிவில் பணிபுரிய, கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, இப்பிரிவுக்கு பணி மாறுதல் பெற, அமைச்சர்களின் சிபாரிசு தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு பணம் கொழிக்கும் பிரிவாக, இது உள்ளது. சடலம் கட்டுவதற்கான துணியை, அவர்கள் கூறும் ஆட்களிடம்தான் வாங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்களோ, 200 ரூபாய் மதிப்புள்ள துணியை, 800 ரூபாய்க்கு விற்கின்றனர். மேலும், 2,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தால்தான், சடலங்களை பரிசோதனைக்கே கொண்டு செல்கின்றனர். இல்லையெனில், ‘இரு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்னை ஏற்படும்‘ என மிரட்டுகின்றனர். ஏற்கனவே குற்ற வழக்கில் சிக்கிய பயத்தில் இருக்கும் உறவினர்கள், வேறு வழியின்றி கேட்ட பணத்தை தர வேண்டியுள்ளது. அதிலும் ஒரு சிலர், ஆண்டுகள் இங்கேயே பணிபுரிவதால், பரிசோதனை அறிக்கைகளை எதிர்தரப்பு வக்கீல்களிடம் ஒப்பித்து, பல ஆயிரம் ரூபாயை பார்த்துவிடுகின்றனர். இதனால், வழக்கின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. இவர்களை மாறுதல் செய்ய முடியாத அளவுக்கு, மேலிட சிபாரிசுகள் வருகின்றன. இதனால், ஏழை, எளிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டீன் கனகராஜ் கூறுகையில், ‘’ஏற்கனவே, இறப்பில் வாடும் குடும்பத்தினரிடம் பணம் வசூலிப்பது மன்னிக்க முடியாதது. இதுகுறித்து, பலமுறை எச்சரித்துள்ளேன். தேவையான காடா துணிகளை, வாங்கி கொடுத்துள்ளோம். எழுத்துப்பூர்வமாக யாரேனும் புகார் அளித்தால், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Label