OUR CLIENTS
பி.எட் . படிப்பிலிருந்து தமிழ் விருப்பப்பாடம் நீக்கம் தமிழை புறக்கணிக்கும் செயலில் தமிழக அரசு :ராமதாஸ் கடும் கண்டனம்
பி.எட் . படிப்பிலிருந்து தமிழ் விருப்பப்பாடம் நீக்கம் தமிழை புறக்கணிக்கும் செயலில் தமிழக அரசு :ராமதாஸ் கடும் கண்டனம் Posted on 30-Oct-2017 பி.எட் . படிப்பிலிருந்து தமிழ் விருப்பப்பாடம்  நீக்கம்  தமிழை புறக்கணிக்கும் செயலில் தமிழக அரசு :ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை, அக்.30-
பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப் பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம் தமிழுக்கு எதிராக மீண்டும் ஒரு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. இது கண்டனத்திற்குரியது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பு 2015-16ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓராண்டுப் படிப்பாக இருந்து வந்தது. இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரைப்படி 2015 - 2016ம் ஆண்டு முதல் பி.எட். படிப்பு 2 ஆண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்டது.

பி.எட். படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் விருப்பப் பாடங்களாக இருந்தன. ஆனால், பி.எட். படிப்பு 2 ஆண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்ட பின்னர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.

இளநிலைப் பட்டப்படிப்பு முடித்து பி.எட் பயிலும் அனைவரும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு விருப்பப் பாடங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகும். தமிழகத்தில் பி.எட். பட்டம் படிப்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் மொழியை தேர்வு செய்வதே வழக்கமாகும். ஆனால், பி.எட். ஈராண்டு படிப்பாக மாற்றப்பட்ட பின்னர் பட்டப்படிப்பில் எதை முதன்மைப் பாடமாக படித்தார்களோ அதை மட்டும் படித்தால் போதுமானது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மிகக் கடுமையாக பாதித்து விடும். இது வருங்கால தலைமுறையினரின் கல்வியை பாதிக்கக்கூடும்.

ஏனெனில், பொதுத் தமிழ் எனப்படும் அப்பாடத்தில் தான் தமிழையும், தமிழ் மொழிவழியில் பிறப்பாடங்களையும் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடம் நீக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழையும், தமிழ் மொழிப் பாடங்களையும் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.

தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வரும் அதிமுக அரசு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம் தமிழுக்கு எதிராக மீண்டும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Label