OUR CLIENTS
வட்டியில்லா கடன் வழங்குவதாக மோசடி : மகளிர் குழுக்களை ஏமாற்றும் “பலே’ கும்பல்!
வட்டியில்லா கடன் வழங்குவதாக மோசடி : மகளிர் குழுக்களை ஏமாற்றும் “பலே’ கும்பல்! Posted on 01-Nov-2017 வட்டியில்லா கடன் வழங்குவதாக மோசடி : மகளிர் குழுக்களை ஏமாற்றும் “பலே’ கும்பல்!

திருப்பூர், நவ.1-
மகளிர் குழுவை சேர்ந்த பெண்களிடம் வட்டியில்லாமல் கடன் வழங்குவதாக கூறும், மோசடி கும்பல் அதிகரித்துள்ளது. பிரபல நிதி நிறுவனங்களின் பெயர்களில் அதிகரிக்கும், இதுபோன்ற நபர்களிடம், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர், அம்மா பாளையத்தை சேர்ந்த இளமதி, கவிதா, ஆகிய இருவரையும் அணுகிய, பல்லடம், மங்கலம் ரோட்டை சேர்ந்த மணியரசு, 34 மற்றும் பச்சாபாளையம் எஸ்.கே.ஆர்., நகரை சேர்ந்த சிவராமன், 23 ஆகியோர், “பஜாஜ் பின் கார்ப்’ என்ற பிரபல நிதி நிறுவனத்தின் மூலம், மகளிர் குழுவுக்கு வட்டியில்லாமல் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு தலா, 570 ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்காக, அப்பகுதியை சேர்ந்த, 50 பெண்களிடம், அந்நிறுவனத்தின் பெயரிலான விண்ணப்பத்தை கொடுத்து, போட்டோ, அடையாள அட்டை உள்ளிட்டவை பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் தெரிவித்தவாறு, கடன் பெற்றுத்தரவில்லை. 

விசாரித்த போது, அவர்களுக்கும் பஜாஜ் நிதி நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது. தாங்கள் மோசடி செய்யப்பட்டது குறித்து, இளமதி அளித்த புகாரின் பேரில், அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணியரசு, சிவராமன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, இது போல், பதிவுக்கட்டணம், வங்கி கணக்கு துவக்கம் போன்ற காரணங்களை கூறி, பணம் பெற்று மோசடி செய்யும் நபர்களின் அட்டகாசம், திருப்பூர் பகுதியில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை நம்பி, அப்பாவி மக்கள் பணம் செலுத்தி ஏமாறுகின்றனர். 

போலீசார் கூறுகையில், “மகளிர் குழுக்களை எளிதில் மோசடி செய்யும் செயலில், இது போன்ற சிலர் ஈடுபடுகின்றனர். கடன் பெறுதல், வங்கி கணக்கு துவக்குதல் என்றால் முறையாக அரசு துறை மற்றும் வங்கிகளை மட்டுமே அணுக வேண்டும்,’ என்றனர்.

பஜாஜ் நிதி நிறுவன உதவி மேலாளர் ராஜேஷ் கூறியதாவது: எங்கள் நிறுவனம் மூலம், இது போல் மகளிர் குழுக்கடன் எதுவும் வழங்குவதில்லை. தனிநபர் உள்ளிட்ட கடன் மட்டுமே வழங்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் பெயர் மூலம், கடன் வழங்குவதாக யார் அணுகினாலும், உரிய ஆவணங்கள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். சந்தேகம் இருந்தால், போலீசில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர், பெருமாநல்லூர் பகுதியில், ஒரு தொண்டு நிறுவனம் பெயரில், நூற்றுக்கணக்கான பெண்களிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி, இதுபோல் ஏற்கனவே லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது.

Label