OUR CLIENTS
தினத் தந்தி பவள விழா : பிரதமர் மோடி பங்கேற்பு
தினத் தந்தி பவள விழா : பிரதமர் மோடி பங்கேற்பு Posted on 02-Nov-2017 தினத் தந்தி பவள விழா : பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை, நவ.2-
தினத் தந்தி நாளிதழ் 1942-ம் ஆண்டு , ‘தந்தி’ என்ற பெயரில் மதுரையில் தொடங்கப்பட்டது. ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் தொடங்கிய ‘தினத்தந்தி’ நாளிதழ் தமிழகத்தில் 13 நகரங்களிலும், பிற மாநிலங்களில் புதுச்சேரி, பெங்களூரு, மும்பை நகரங்கள், வெளிநாட்டில் துபாய் உள்ளிட்ட 17 நகரங்களில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது ‘தினத்தந்தி’.

மக்கள் பணியில் 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து பவள விழாவை கொண்டாடுகிறது. பவள விழா சென்னை - சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நவம்பர் 6ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.  விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவதுடன், பவள விழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.  தினத் தந்தி  இயக்குநர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடிகே. பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

விழாவில், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷத்துக்கு சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. ஆரம்ப காலத்தில் சைக்கிளில் சென்று ‘தினத் தந்தி’-ஐ விற்பனை செய்த வி.ஜி. சந்தோஷம், பிற்காலத்தில் பிரபல தொழிலதிபராக உயர்ந்தவர். எனவே, அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.  ‘தினத் தந்தி’ சார்பில் ஆண்டுதோறும் சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு விருதுடன் ரூ .3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு விருதுடன் ரூ. 2 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மூத்த தமிழறிஞர் விருதை ஈரோடு தமிழன்பனும், சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசை ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவும் பெறுகிறார்கள். விருது மற்றும் பரிசு தொகையைப் பிரதமர் நரேந்திர மோடி விழா மேடையில் வழங்குகிறார்.  பவள  விழாவில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

Label